காவல் துறையினர் ரோந்து பணியை எளிமையாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ரோந்து பைக்கை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ”Smart Policing for Smart City' என்று Tagline உடன் கோவை மாநகர காவல் துறை சரக்கத்திற்கு உட்பட்ட ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் ரோந்து பணியை எளிதாக்குவதற்காக, குமரகுரு இன்ஸ்டிடியூஷன்ஸ் மாணவர்களின் உதவியுடன் இந்த ரோந்து பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ரோந்து பைக் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவலர்கள் இதனை ரோந்து பணிக்கு பயன்படுத்துவார்கள். இது எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பொறுத்து கோவை மாநகரில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பகுதிகளான வாலாங்குளம், உக்கடம், ஆர்எஸ் புரம், குறிச்சி உள்ளிட்ட 6 பகுதிகளில் 6 ரோந்து பைக்குகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் பயன்பாடுகளைப் பொறுத்து மற்ற இடங்களிலும் விரிவுபடுத்தப்படும்.


குமரகுரு இன்ஸ்டிடியூஷன்ஸ் மாணவர்கள் திறமையாக இதை வடிவமைத்துள்ளனர். இந்த ரோந்து பைக், Public Address System, Flashlight, GPS உள்ளிட்ட சேவைகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் வாகனமாக உள்ளது. 'Smart Policing for Smart City' என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாகனம் மக்களுக்கும் காவல்துறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். ஏற்கனவே ரோந்து பணிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டோக்கள் குறித்து, சிறிய அளவிலான தெருக்களில் ரோந்து பணி செய்வதற்கு பயனுள்ள ஒன்றாக உள்ளது. விபத்துக்குள்ளாகியவர்களுக்கு மருத்துவ உதவி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையில் உதவியாக உள்ளது" என்றார்.




பாதுகாப்பு ஏற்பாடுகள்


அவர் மேலும் கூறுகையில், "குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல், இரவு பகல் என இரண்டு நேரங்களிலும் ரோந்து பணியில் பயன்படுத்தப்படும். ரேஸ் கோர்ஸில் ஏற்கனவே 'May I Help You" என்ற பூத் செயல்பாட்டில் இருக்கிறது. இது ஒரே இடத்தில் செயல்படும். இந்த ரோந்து பைக் காவலர்களின் பணியை எளிதாக்கி முழு பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த ரோந்து பைக் உருவாக்கப்பட்டுள்ளது." என்றார். சுதந்திர தின பாதுகாப்புகள் குறித்து, "கோவை மாநகர எல்லையில் உள்ள சோதனை சாவடிகள், வாகனத் தணிக்கை செய்யும் இடங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


அணிவகுப்பு நடைபெறும் வ.உ.சி மைதானத்தில் நேற்றிலிருந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள்.  மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரை பொறுத்தவரை சுதந்திர தின கொண்டாட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடைபெறும்." என்று உறுதி அளித்தார்.