வால்பாறை என்றதும் வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளும், பனி மூடிய மலைகளும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும், குளிருக்கு இதமான தேநீரும் கண் முன்னே காட்சிகளாக விரிக்கும். இயற்கை ஏழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள வால்பாறை, சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக இருந்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை ஏழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தேயிலை தொழில் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. வால்பாறையை ஒட்டியுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், புலி, யானை, வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதேபோல ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதையை ரசிக்கவும், ஆங்காங்கே தென்படும் விலங்குகளை காணவும், நாள்தோறும் வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதேபோல அதே சாலையில் குரங்கு அருவி எனப்படும் கவியருவியும் அமைந்துள்ளது. இங்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பாஸ்ட் டேக் அறிமுகம்
கவியருவி மற்றும் வால்பாறை செல்ல வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் வன சோதனைச்சாவடியில், நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்னரே செல்ல முடியும். இதனால் அந்த சோதனைச்சாவடியில் அதிக அளவிலான வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நுழைவ கட்டணம் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து எடுக்க வேண்டிய சூழல் நிலவி வந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி வழியாக சுற்றுலா செல்ல ஃபாஸ்ட் டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவாக வாகனங்கள் கட்டணம் செலுத்தி செல்ல முடியும் என்பதால், வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த திட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.