நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் லாங்வுட் சோலை அமைந்துள்ளது. 116 ஹெக்டர் பரப்பளவில் பல்லுயிர் சூழல் மண்டலத்தில் அமைந்துள்ள இந்த காட்டில், அரிய வகை தாவரங்கள், ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகிறது. பசுமை மாறாத காடான இந்த காட்டில் உள்ள சதுப்பு நிலங்களில் இருந்து ஆண்டுதோறும் தண்ணீர் உற்பத்தியாகி வருகிறது. இந்த தண்ணீர் கோத்தகிரி பகுதியில் உள்ள 18 கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. சிறந்த காடுகளில் ஒன்றான லாங்வுட் சோலைக்கு ’குயின்ஸ் கெனோபி’ என்ற சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் லாங்வுட் சோலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளக்க மையம் அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கட்டுமானங்கள் கட்டவும், சூழல் சுற்றுலா அமைக்கவும் சூழலியல் செயற்பாட்டாளர்களும், அப்பகுதி மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மீட்டுருவாக்கப்பட்ட காடு


இதுகுறித்து சூழலியல் செயற்பாட்டாளர் கோவை சதாசிவம் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தோறும் நிலச்சரிவிற்கு உள்ளாகும் கோத்தகிரிக்கு மிக அருகில் 116 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலைக்காடுகளுக்கு இடையே எஞ்சியிருக்கும் அடர் காட்டின் பெயர் ‘லாங்வுட் சோலா’. காட்டுமாடுகள், மலை அணில்கள், கூரைப்பன்றிகள், மரநாய்கள், சீகாரப்பூங்குருவிகள் என நகரமயமாகும் நீலகிரி காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட எண்ணற்ற உயிர்களின் கடைசிப்புகலிடமாக விளங்கும் லாங்வுட் சோலாவின் வரலாறு துயரங்களையும், நம்பிக்கைகளையும் தன்னகத்தே கொண்டது. பெரும் பகுதி அழிக்கப்பட்டு, பிறகு இயற்கை செயற்பாட்டாளர்களின் அயராத முயற்சியில் மறுபடியும் உயிர்த்தெழுந்த ஓர் காட்டை காட்டுங்கள் என்றால் நமது சுட்டு விரல் லாங்வுட்சோலாவின் திசை நோக்கி நீளும்.


 



லாங்வுட் சோலை


விலங்குகளுக்கு மட்டுமில்லாமல் கோத்தகிரியைச் சுற்றிலும் வசிக்கும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான மக்களின் நீராதாரமும் லாங்வுட் சோலாதான். இயற்கையின் உயிர் மூச்சான இக்காட்டில் தனித்துவமான தாவரத்தொகுதிகளும் உள்ளன. லாங்வுட் சோலாவின் வற்றாத மூன்று நீரோடைகள்தான் எல்லாக்காலங்களிலும் உயிர்களுக்கு தாகம் தணிக்கின்றன. இந்த நிலையில் சுற்று சூழல் விழிப்புணர்வு மையத்தை விரிவு படுத்தி சூழல் சுற்றுலா தளம் அமைக்க தமிழ்நாடு அரசு  திட்டமிட்டு அதன் மேம்பாட்டுக்கான நிதியையும் அறிவித்துள்ளது.


 



கோவை சதாசிவம்


கோடிக்கணக்கில் நிதியாக வரும் பணத்தில் கையூட்டு பெறுவதற்கு ஒரே வழி கட்டுமான திட்டம் தான். வெகு துரிதமாக தொடங்கும் கட்டுமானப்பணியினைப் பார்க்கையில் மக்களுக்கு மட்டுமில்லாமல் காட்டுயிர்களுக்கும் அச்சம் ஏற்படுகின்றன. ஒவ்வொரு இரவும் பறவைகளின் இன்னிசையோடு விடியும் காட்டில் சுற்றுலாதளம் வந்தால், மனிதர்களின் இரைச்சலோடுதான் காட்டின் இரவு விடியும். இதனால் காட்டிற்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். லாங்வுட் சோலாவில் இந்த மேம்பாட்டுத்திட்டம் நிறைவேறினால் இப்பகுதியில் வாழும் மக்களுக்கும் காட்டுயிர்களுக்கும் பாதிப்பு வரும். காலநிலை மாற்றத்தையும், காடுகளின் இருப்பையும் உணர்ந்து இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


கையெழுத்து இயக்கம்


சூழலியல் செயற்பாட்டாளர் யோகநாதன் கூறுகையில், ”பல்லுயிர் சூழல் நிறைந்த இப்பகுதியில் கட்டுமானங்களும், சுற்றுலா பயணிகளும் வந்தால் இயற்கை சூழல் சீரழியும். அதனால் மக்களுக்கு குடிநீர் கிடைக்காது. அழிவில் இருந்து காப்பாற்றப்பட்ட காட்டில், சுற்றுலா தலம் அமைப்பது மோசமான செயல். அதற்கு பதிலாக கோத்தகிரியில் உள்ள பல இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.


 



யோகநாதன்


இதுதொடர்பாக கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த சிரில் என்பவர் கூறுகையில், “லாங்க்வுட் சோலைகாட்டினில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளக்க மையம் என்ற பெயரில் பெரிய அளவிலான கட்டிடங்களும், கழிவறைகளும் கட்டுவதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் மிகவும் தொன்மையான லாங்க்வுட் வனமும், வாழும் உயிரினங்களும், நீர் சேமிக்கும் ஈர நிலங்களும், பன்னெடுங்காலமாக உயிர் நீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் வந்தால், காடு குப்பை மேடாகும். வளர்ச்சி என்ற பெயரில் காடழிப்பு நடக்கும். அதனால் இந்த திட்டத்தை கைவிட கோரி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.


 



ஆலோசணைக் கூட்டம்


லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு செயலர் ராஜூவிடம் விளக்கம் கேட்ட போது, “25 வருடங்களாக இந்த காட்டை மிகுந்த சிரமத்திற்கு இடையே பாதுகாத்து வருகிறோம். மாணவ, மாணவிகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளக்க மையம் என அரசு அதிகாரிகள் என்ன செய்ய உள்ளார்கள் எனத் தெரியவில்லை. ஏற்கனவே சில கட்டிடங்கள் இருப்பதால், புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டாம் என வனத்துறை செயலரிடம் வலியுறுத்தியுள்ளோம். அதேசமயம் இயற்கையை ரசிக்க எல்லோருக்கும் உரிமை உள்ளது. சுற்றுலா பயணிகள் வருவது தவறு அல்ல. நகரில் உள்ளவர்கள் காட்டை பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் இங்கு வந்து பார்த்தால் தான் காட்டை பற்றி தெரிந்து கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.