கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஆர்.வி.எஸ். என்ற தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சேலத்தை சேர்ந்த அகிலேஷ் (18) என்ற மாணவர் பி.இ. மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ம் தேதியன்று தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் அகிலேஷ் விடுதியில் இருந்த போது, அதே கல்லூரியில் அதே பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் குரல் இனியன், அரவிந்த் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முத்துக்குமார், கோகுல் ஆகிய நான்கு பேரும் அங்கு வந்துள்ளனர்.


அப்போது கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக் கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்பு கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறி அகிலேஷை எச்சரித்தாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று அகிலேஷ் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களையும், கல்லூரிக்கு வெளியில் சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அறை எடுத்து தங்கியுள்ள நான்காம் ஆண்டு மாணவர் வெங்கடேஷ் என்பவரது அறைக்கு வரச் சொல்லியுள்ளனர். இதன் பேரில் அங்கு சென்ற போது அகிலேஷ் தவிர மற்ற 12 மாணவர்களையும் எச்சரித்து கல்லூரிக்குள் அனுப்பியதாகவும், அகிலேஷ் என்பவரை மட்டும் முத்துக்குமார், கோகுல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சூலூரில் ஆவின் டீக்கடையில் வேலை பார்க்கும் முத்துக்குமாரின் நண்பர் தனபால் என்பவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.




அங்கு மூவரும் சேர்ந்து அகிலேஷை கெட்ட வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கியதாகவும், அதில் அகிலேஷுக்கு இடது நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அகிலேசின் வாட்ச் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்தாகவும், கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்  இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து முத்துக்குமார், கோகுல், தனபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகிலேஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் 294(b), 323, 506 (1) மற்றும் தமிழ்நாடு ராக்கிங் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் ராகிங் செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மேலும் ஒரு கல்லூரி மாணவர்கள் மீது ராகிங் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.