கோவை குனியமுத்தூர் புறக்காவல் நிலையத்தில் இருந்த காவலர்களை தாக்கி, விசாரணைக்கு அழைத்து வந்த நபரை உறவினர்கள் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கோவை - பாலக்காடு சாலையில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் ஒரு பேக்கரி முன்பு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் நேற்று குனியமுத்தூர் காவலர் வடிவேல் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் (45) என்பவரை பிடித்தார். பின்னர் அவரை சுகுணாபுரத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றார். இந்த தகவல் அப்துல் காதரின் மகன் முஜீப் ரகுமானுக்கு (24) தெரியவந்தது. உடனே அவர் தனது பெரியப்பா மகன் சல்மான்(23), உறவினர் சகாப்தீன் (48) ஆகியோரை அழைத்துக் கொண்டு சுகுணாபுரம் புறக்காவல் நிலையத்திற்கு சென்றார்.
அங்கிருந்த காவலர் வடிவேலுவிடம் முஜிப் ரகுமான் தனது தந்தை அப்துல் காதரை விடுவிக்குமாறு கூறினார். அதற்கு அவர் ஆய்வாளர் வந்ததும் பேசி கொள்ளுங்கள் எனக் கூறினார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முஜிப் ரகுமான் தனது கையால் காவலர் வடிவேல் முகத்தில் தாக்கினார். இதனைப்பார்த்த அங்கு பணியில் இருந்த காவலர்கள் நல்லதம்பி, விஜயகுமார் ஆகியோர் தடுப்பதற்காக சென்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து காவலர்கள் 3 பேரையும் தாக்கி விட்டு, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அப்துல் காதரை அழைத்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து காவலர் வடிவேல் குனியமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். காவல் துறையினர் இரவு முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டு பதுங்கி இருந்த அப்துல் காதர், அவரது மகன் முஜீப் ரகுமான், அண்ணன் மகன் சல்மான், உறவினர் சகாப்தீன் ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 3 காவலர்களை தாக்கி லாட்டரி சீட்டு விற்பனையில் கைதானவரை அழைத்து சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.