கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகமாபுதூர் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து அது குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், நேற்றிரவு அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் 6க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அந்த அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திர பதிவு மற்றும் அதற்கான கட்டணம் சரியாக உள்ளதாக, லஞ்சம் பெறப்பட்டுள்ளதா என பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று இரவு 9 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இன்று காலை வரை நடைபெற்றது.


இந்த சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத 1.40 லட்சம் ரூபாய் பணம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இது குறித்து அன்னூர் சார் பதிவாளரான செல்வ பாலமுருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கணக்கில் வராத பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். சார் பதிவாளர் அலுவலத்தில் விடிய விடிய நடந்த சோதனையில் கணக்கில் வராத 1.40 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் சோதனைகளில் இலட்சக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.