கோவை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. ரூ.779 கோடியில் பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க முடியும். மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டிபெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது. மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில், குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட தொடர்பு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலெக்டர் சமீரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கேஎன்.நேரு, “குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தோம். பில்லூர் முடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கேரளாவில் இருந்து 98 எம்.எல்.டி தண்ணீருக்கு பதில், 39 .எம்.எல்.டி குடிநீர் குறைவாக தான் தரப்படுகிறது. அதை சரி செய்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்த பணிகள் நிறைவு பெற்றால் 178 எம்.எல்.டி தண்ணீரும் கிடைக்கும். 2 மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. பில்லூர் அணையில் உள்ள சேற்றை அகற்ற நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசி தூர் வாரப்படும். தற்போது பில்லூர் குடிநீர் திட்ட பணிகள் 60 % சதவீதம் நிறைவடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்