Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
கோவையில் பிரபலமான கோனியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான இந்து பக்தர்களின் தாகத்தை இஸ்லாமியர்கள் தீர்த்தனர்.

இந்தியா உலக அரங்கில் பல நாடுகளால் போற்றப்படுவதற்கு காரணம் இந்தியாவின் சகிப்புத்தன்மையும், மதச்சார்பற்ற போக்குமே காரணம் ஆகும். குறிப்பாக, இந்தியாவிலே மதநல்லிணக்கத்திற்கு மற்ற மாநிலங்களுக்கு அடையாளமாக திகழும் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
கோவை கோனியம்மன் கோயில் திருவிழா:
Just In




தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் மக்களை நெகிழ வைத்துள்ளது. அதாவது, கோவையில் அமைந்துள்ளது கோனியம்மன் கோயில். கோவையின் காவல் தெய்வமாக இந்த அம்மனை கோயம்புத்தூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோயிலின் திருவிழாவிலும், தேரோட்டத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த மாதம் 25ந் தேதி இந்த கோயில் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்த நிலையில், கோனியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் கோவையில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்:
இந்த கோயில் தேரோட்டத்தில் பங்கேற்க வந்த மக்களுக்கு கோவை பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இலவசமாக தண்ணீர் வழங்கினர். சுமார் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்காக மணிக்கணக்கில் தொடர்ந்து தண்ணீர் கேன் இலவசமாக விநியோகித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்கள் இந்து பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து மதநல்லிணக்கத்திற்காக பாராட்டி வருகின்றனர.
விண்ணதிர்ந்த ஓம் சக்தி, பராசக்தி:
கோனியம்மன் கோயில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று கோஷம் எழுப்பினர். தேரோட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் பொருட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டம் ஒப்பனைக்காரர் வீதி, வைஷியால் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக சென்றது.
கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னிசாட்டு நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினசரி பக்தர்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபட்டனர். கடந்த 26ம் தேதி அம்மன் புலி வாகனத்திலும், 27ம் தேதி கிளி வாகனத்திலும், 28ம் தேதி சிம்ம வாகனத்திலும், 1ம் தேதி அன்ன வாகனத்திலும் அம்மன் வீதி உலா வந்தனர்.