கோவை சிட்கோ தொழில் பேட்டையில் உள்ள கொசிமா சங்க அலுவலகத்தில் சிறு மற்றும் குறுந்தொழில் அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டான்சியா தலைவர் மாரியப்பன், ”தமிழ்நாடு அரசு 8 ஆண்டு காலம் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் தற்போது உயர்த்தியுள்ளது. தொழில் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும் மின்சார கட்டணத்தை செலுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பீக் ஹவர் மின்கட்டணம் 3 மணி நேரம் என்பதை 8 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில் அமைப்புகளை மின்சார வாரியம் ஏமாற்றி வருகிறது. கிலோவாட்டை குறைத்து தர சொன்னால் ரூபாய் 5 லட்சம் பணம் செலுத்த சொல்கின்றனர். மின்சாரம் வேண்டாம் என்றாலும் பணம் கேட்பது என்பது எம்.எஸ்.எம்.இ.க்கு இரட்டிப்பு தண்டனையை மின்சார வாரியம் வழங்கியுள்ளது. நெசவாளர்களுக்கு மின் சலுகைகள் வழங்கியதை வரவேற்கிறோம். இருப்பினும் ஒரு கண்ணுக்கு நெய் மறு கண்ணிற்கு சுண்ணாம்பு என்ற வகையில் மாற்றாந்தாய் கண்ணோட்டத்தோடு எம்.எஸ்.எம்.இ., பார்ப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும். 


சட்டமன்றத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மின்சார வாரியத்தால் பாதிக்கப்படவில்லை எனக்கூறியது தவறு. எம்.எஸ்.எம்.இ. இலவசம் கேட்கவில்லை. தங்களால் முடிந்தளவு செலுத்தும் வகையில் மின் கட்டணத்தை குறைக்கவே கேட்பதாக வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழகத்தில் உள்ள 130 சிட்கோ பேட்டைகளில் 24 தொழிற்பேட்டைகளுக்கு 99 வருட குத்தகை முறையை ரத்து செய்ய வேண்டும். நில மனைகளை விற்பனை பத்திரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்னிறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறும். எம்.எஸ்.எம்.இ.க்கான நல வாரியம் அமைத்து தரக்கோரி பல ஆண்டு காலம் கேட்டு வருவதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, General insurance corporation limited மூலம் அரசு பாலிசி எடுத்து கட்டணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட அரசால் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுந்தரதேவன் குழுவின் 50 பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். 


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதிவழி போராட்டமும், ஒரு நாள் வேலை நிறுத்தமும் நடைபெற உள்ளது. கோவையில் கொடிசியா தவிர 22 தொழில் அமைப்புகள் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்க உள்ளனர். தொழில் துறையினர் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை நேரில் சந்தித்து பல முறை பேசி இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. 8 வருடமாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. படிப்படியாக உயர்த்தியிருந்தால் பிரச்சினையில்லை. அதிமுக அரசு ஏற்றியதா இல்லையா என்ற  அரசியல் விவகாரத்திற்குள் வரவில்லை. எதனால் கட்டண உயர்வு ஏற்றினோம் என்பது  குறித்து தொழில் துறையிடம் தமிழக மின்துறை அமைச்சர் இதுவரை சொல்லவில்லை. மத்திய அரசு நிர்பந்தம் என்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்களிடம் சொல்லவே இல்லை. தமிழகம் முழுவதும் 150 அமைப்புகள் இந்த ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண