கோவை மாவட்டம் பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் மூன்று நாள் கல்வி சுற்றுலாவாக பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த கல்வி பயணத்தை ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உலகத்தை நேரில் காணும் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Continues below advertisement

மாணவர்கள் கோவையிலிருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டனர். ரயில் பயணம் பல மாணவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. பயணத்தின் போது ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கி, சுற்றுலாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

அரசு பள்ளி மாணவர்களின் கனவு பயணம் நனவானது

Continues below advertisement

பெங்களூரில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சி, முக்கிய அருங்காட்சியகங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டனர். பாடப்புத்தகங்களில் மட்டும் பார்த்திருந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், விண்வெளி தொடர்பான மாதிரிகள், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வரலாற்றுப் பொருட்களை நேரில் காணும் வாய்ப்பு மாணவர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி அறிந்து கொண்ட அவர்கள், எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக உருவாக வேண்டும் என்ற கனவுகளையும் பகிர்ந்தனர்.

சுற்றுலா நிறைவடைந்த பிறகு, மாணவர்கள் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு திரும்பினர். பலருக்கும் இது முதல் விமானப் பயணமாக இருந்தது. தரையில் இருந்து வானில் பறக்கும் விமானத்தை ரசித்த அனுபவம் மட்டுமே இருந்த நிலையில், விமானத்தில் நேரடியாக பயணம் செய்தது அவர்களுக்கு மறக்க முடியாத நினைவாக அமைந்தது.

கோவை விமான நிலையத்தில் திரும்பிய மாணவர்களுக்கு சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, இந்த கல்வி சுற்றுலாவின் வெற்றியை வெளிப்படுத்தியது. இத்தகைய முயற்சிகள் அரசு பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதுடன், அவர்களின் எதிர்கால கனவுகளுக்கு புதிய திசையையும் வழங்குகின்றன.