கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர்சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

Continues below advertisement

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் ஒரு பெண் யானை சுற்றி வந்தது. அந்த யானை உடல் மெலிந்த நிலையில், மிகவும் சோர்வுடன் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் அந்த யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானையின் வாய்ப்பகுதியில் காயங்கள் இருப்பதால், தீவணங்கள் உண்ண முடியாமலும், தண்ணீர் அருந்த முடியாமலும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த யானையை கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

 

Continues below advertisement

பின்னர் அந்த யானை டாப்சிலிப் அருகேயுள்ள வரகழியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூண்டில் அடைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்த போது, அந்த யானையின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடியே காரணம் என்பது தெரிவந்தது. அவுட்டுகாய் மூலம் யானை உயிரிழக்க காரணமானவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உணவு பொருட்களில் வைக்கப்படும் அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடியை கடித்து காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள வன எல்லையோரப் பகுதிகளில் தனிப்படை வனத்துறையினர் நாட்டு வெடி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஆதிமாதையனூர், மேல்பாவி, கோபனாரி உள்ளிட்ட கிராமங்களில் மோப்பநாய் உதவியுடன் வனப்பணியாளர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வனவிலங்களை பிடிக்க வைக்கப்படும் பொறி, கண்ணி, சட்ட விரோத மின்வேலிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்தும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண