கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. சிறு வயதில் இருந்தே வாகனங்கள் ஓட்டுவதில் ஆர்வம் இருந்த இவருக்கு, ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மகேஷ் ஊக்கம் அளித்து வாகனங்கள் ஓட்ட கற்றுத் தந்தார். பின்னர் தனது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப் பார்த்த ஷர்மிளா, தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியிருக்கிறார். பின்னர் ஆட்டோ ஓட்டுநராக ஷர்மிளா பணி புரிந்து வந்தார். இதனிடையே பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்ட ஷர்மிளா, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றுள்ளார். ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என நினைத்த ஷர்மிளாவிற்கு, குடும்பத்தினர் ஆதரவு கிடைத்தது. ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.


கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணித்து, வாழ்த்துகளை தெரிவித்தார். இதேபோல இன்று திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஷர்மிளாவை நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். மேலும் பேருந்தில் பயணித்த பெண்களிடமும் உரையாடினார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த அவர், ஷர்மிளாவிற்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.


இந்நிலையில் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஷர்மிளா கூறுகையில், “கனிமொழி என்னை வந்து பாராட்டினார். அவர் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணித்தார். கன்டக்டர் கனிமொழியை அவமதிக்கும் வகையில் எத்தனை பேர் வந்தீங்க? எங்க போறீங்க? என புண்படும் படி பேசினார். மரியாதையாக பேசுமாறு கண்டக்டரிடம் அறிவுறுத்தினேன். அவர் அப்படித்தான் பேசுவேன் எனக்கூறினார். வாகனத்தில் இருந்து இறங்கியதும் இதுகுறித்து முதலாளியிடம் கூறினேன். அவரும் யார் வந்தாலும் அப்படித்தான் பேசுவோம். நீங்க பிரபலமாவதற்கு என்ன வேணாலும் செய்வீங்களா எனக்கேட்டார். எனது அப்பா உங்களிடம் அனுமதி வாங்கித்தானே வரச்சொன்னோம். அப்புறம் ஏன் இப்படி பேசுறீங்க எனக்கேட்டதற்கு ? உங்க பொண்ணை அழைத்து செல்லுங்க எனக்கூறிவிட்டனர். அதனால் நாங்கள் வேலையில் இருந்து வந்துவிட்டோம்”எனத் தெரிவித்தார்.


இதுகுறித்து சர்மிளாவின் தந்தை மகேஷ் கூறுகையில், “மேலாளரிடம் முதலே அனுமதி வாங்கித்தான் அவரை வரசொன்னதாகவும், வந்தவரை இப்படி புண்படும்படி பேசலாமா எனக்கேட்டேன். உங்களிடம் அனுமதி வாங்காமல் கூட்டி வர எனக்கு பைத்தியம் இல்லை என்று சொன்னவுடன், எங்களை அவமதித்து பொண்ணை கூட்டிட்டு வெளியே போகுமாறு கூறிவிட்டார்” என்றார். அதேசமயம் விவி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஷர்மிளாவே பணியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் துரை கண்ணன் கூறுகையில், “கனிமொழி வந்தது எங்களுக்கு தெரியாது. அவர்களாகவே பணியில் இருந்து விலகுவதாக கூறினார்கள். மீண்டும் பணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.


தன்னை பணி நீக்கம் செய்ததாக ஷர்மிளாவும், ஷர்மிளாவே பணியில் இருந்து விலகியதாகவும் பேருந்து நிறுவனமும் கூறினாலும், ஷர்மிளாவின் வேலை பறிபோனது என்பது உண்மை.