Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
Coimbatore Double Decker Flyover: கோவையி டபுள் டக்கர் மேம்பாலம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Coimbatore Double Decker Flyover: மேல் தளத்தில் மெட்ரோ, கீழ் தளத்தில் வாகன போக்குவரத்து என, கோவையில் டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்டம்:
தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ளன். இதனிடையே, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக நடப்பாண்டில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை மெட்ரோ ரயில் சேவை பூமிக்கு அடியில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை திட்டத்தில் அதுபோன்ற சிக்கல்கள் இல்லாததால், மத்திய அரசு அனுமதி கொடுத்த அடுத்த 3 ஆண்டுகளில் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
34.8 கிமீ தூரத்திற்கான மெட்ரோ திட்டம்:
அவிநாசி மற்றும் சத்தியமங்கலம் சாலையில் சுமார் 34.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 32 நிறுத்தங்களோடு மொத்தம் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தயாராகி உள்ளது. இதில் சத்தியமங்கலம் சாலையில் முதல் தளமாக மெட்ரோ திட்டம் அமையும். அவிநாசி சாலையில் நெடுஞ்சாலை துறையினரின் பாலங்கள் இருக்கும் இடத்தில் இரண்டாம் தளமாக அதைவிட உயரத்தில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பாலம் அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த டபுள் டக்கர் மேம்பாலம் தான் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டபுள் டக்கர் மேம்பாலம் எங்கு?
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), மாநில நெடுஞ்சாலை ஆணையத்துடன் (சிறப்பு திட்டம்) இணைந்து, கோவையின் கோல்ட்வின்ஸ் முதல் லி மெரிடியன் ஹோட்டல் வரை 3 கி.மீ நீளத்திற்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் தளத்தில் பொதுப்போக்குவரத்து வழக்கம்போல் தொடர, மேல் தளத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் மெட்ரோ நிர்வாகம் கூடுதலாக நிலம் எதையும் கையகப்படுத்த வேண்டியதில்லை. கோவையில் புதன்கிழமை நடைபெற்ற 'கோயம்புத்தூர் நகர மேம்பாலங்கள் - சமீபத்திய புதுப்பிப்பு' என்ற அமர்வில் உரையாற்றிய, கோயம்புத்தூரின் நெடுஞ்சாலைகள் (சாலை பாதுகாப்பு) பிரிவு பொறியாளர் ஜி. மனுநீதி இந்த தகவலை பகிர்ந்தார்.
ரூ.600 கோடியில் நீட்டிக்கப்பட்ட பணிகள்:
மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் (சிறப்புத் திட்டம்) அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை 10.1 கி.மீ நீளத்திற்கு ஒரு உயர்த்தப்பட்ட வழித்தடத்தை அமைத்து வருகிறது. இந்நிலையில் கோல்ட்வின்ஸ் முதல் நீலம்பூர் வரை 5 கி.மீ நீளத்திற்கு உயர்த்தப்பட்ட வழித்தடம் நீட்டிக்கப்படும் என்றும், மாநில அரசு இந்த திட்டத்திற்காக ரூ.600 கோடி ஒதுக்கும் என்றும் கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். உடனடியாக, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் (சிறப்புத் திட்டம்) பிரிவு அந்தப் பாதையில் நில அளவீடு மற்றும் மண் பரிசோதனையைத் தொடங்கியது. விரிவான திட்ட அறிக்கையும் தயாரித்துள்ளது.
மெட்ரோ ரயில் பணிகள்:
இதற்கிடையில், உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் வழியாக, நீலம்பூர் ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் நிலையம் வரை 20.4 கி.மீ நீளத்திற்கு வழித்தடம்-I பணியை செயல்படுத்துவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது மேலும், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), L&T பைபாஸ் சாலையை ஒட்டி ஒரு புதிய முனையக் கட்டிடத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோட்டல் லி மெரிடியன் முதல் விமான நிலைய முனையக் கட்டிடம் வரை 100 அடி நீள சாலை அமைக்கப்படும் என்றும், ஹோட்டல் லி மெரிடியன் முதல் புதிய விமான நிலைய முனையக் கட்டிடம் வரை தூண்களை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.