கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை செய்திட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர், புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதற்காக, ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் கந்துவட்டி புகார்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கந்துவட்டி புகார்கள் தொடர்பாக இன்று ’ஆப்ரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டது. மொத்தம் 41 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 17 பேர் கைது செய்யப்பட்டு, ஒரு கோடியே 29 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மாவட்டம் முழுவதும் கந்துவட்டி புகார்கள் அடிப்படையில் ஆபரேஷன் கந்துவட்டி இன்று நடத்தப்பட்டது. மொத்தம் 41 இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. 6 டிஎஸ்பி, 20 இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 1 கோடி 29 இலட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 327 நில ஆவணங்கள், 79 பிராமிசரி நோட்டுகள், 127 பிளாங் செக்கள், 54 கையெழுத்திடாத ஆவணங்கள், 48 ஏடிஎம் கார்டுகள், பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். கந்துவட்டி தொடர்பான புகார்கள் இருந்தால், காவல் துறையினரை அணுக பொது மக்கள் யோசிக்க வேண்டாம். காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் நிலையங்களில் நேரடியாக புகார் அளிக்கலாம். புகார்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வீரர்கள் பேருந்தில் பயணம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்