கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 'Building Bharat - Journey towards 2024' எனும் தலைப்பில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சம்பவி சங்கல்ப், யங் இந்தியன்ஸ், சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரா மற்றும் பி.எஸ்.ஜி கல்வி நிறுவனம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர், கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அப்போதுதான் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அதற்கான உரிய கொள்கைகளை வகுக்க முடியும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரையில் பேசியதாவது, 'சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வருங்காலத்தில் உயரிய பதவிகள் வகிக்கவுள்ள இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது கடின உழைப்பு பாராட்டத்தக்கது.
திருக்குறளை மேற்கோள் காட்டிய ஆளுநர்
தேசத்தின் வளர்ச்சியில் அரசியல் பிரதிநிதிகளின் பங்கும், அரசு அதிகாரிகளின் பங்கும் மிக முக்கியமானதாகும். மக்களின் குறைகளை கேட்டு அறியவும், அவர்களுக்கான கொள்கைகளை வகுக்கவும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. குறிப்பாக கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி இளைஞர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அவர்கள் அதிகாரிகளாக வரும் பொழுது அவர்கள் சார்ந்த பகுதிகளின் பிரச்சனைகளை உணர்ந்து அந்த மக்களின் வலிகளை உணர்ந்து செயல்படுவார்கள். நானும் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று வந்துள்ளேன். மண்ணண்ணெய் விளக்கில் படித்துள்ளேன். பள்ளிக்காக 8 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளேன். என்னுடைய கனவும், எனது பெற்றோர்களின் உழைப்பும் தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது.
திருவள்ளுவரின் 'எண்ணிய எண்ணியாங்கு..' எனும் திருக்குறள் எனக்கு பெரும் உந்து சக்தியாக இப்போதும் உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் இனிமேல் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் அலுவல் பணிகளையும் சேர்த்து கவனிக்க வேண்டி வரும். எவ்வாறு இவை இரண்டையும் சமாளிக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக வெற்றியை தலைக்கேற்றக்கூடாது. எப்போதும் பணிவோடு இருக்க வேண்டும். நமது வெற்றி என்பது தனிப்பட்ட வெற்றி கிடையாது. அது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி என உணர வேண்டும். உடல் நலமும் மன நலமும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் இதற்கு யோகாப் பயிற்சி பெரும் பலன் தரும். வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை கையாள வேண்டும். நிதி மேலாண்மை மிகவும் முக்கியம். இவற்றோடு சுய ஒழுக்கம், மன உறுதி மிகவும் அவசியமாகும்.
கருப்பு உடைக்கு தடை
இந்த தேசத்திற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது மிகவும் அவசியமாகும். எனவே செய்யும் பணியை முழு மனதோடு ஆர்வத்துடன் செய்ய வேண்டும். தொடர்ந்து படித்து அறிவை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். சிவில் சர்வீஸ் பிரிவில் ஏராளமான வாய்ப்புகள் தற்போது உள்ளது. பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் இளைஞர்கள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். வளர்ச்சி அடைந்த இந்தியாவின் பலன்களை அனுபவிக்க நாங்கள் இருக்கப் போவதில்லை. இளைஞர்கள் தான் அந்த பலனை அனுபவிக்க போகின்றனர். இளைஞர்கள் தான் இந்த தேசத்தின் சொத்து. அந்த அடிப்படையில் இளைஞர்கள் அவர்களது பொறுப்புகளை உணர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்' என தெரிவித்தார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வந்த சில மாணவ, மாணவிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கருப்பு உடை அணிந்து வந்ததால், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்தனர். மாணவிகள் துப்பட்டா அணிந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உடையை மாற்றி வந்த மாணவர்களை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளித்தனர்.