கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணி அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ஹரிணி (9) மற்றும் ஷிவானி (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் கூலி வேலைக்கு சென்று வந்தார். புஷ்பா வீட்டு வேலை செய்து சம்பாதித்தது வந்தார். இதனிடையே தங்கராஜ் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிலேயே இருப்பதாகவும், இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே நாள்தோறும் வாக்குவாதம் சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்று காலை தங்கராஜ் அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதாகவும், ஒரு குழந்தையை மீட்ட நிலையில் இன்னொரு குழந்தை மற்றும் மனைவியை மேலே எடுப்பதற்கு உதவி செய்யுங்கள் என்றும் அணுகியுள்ளார். தங்கராஜ் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புஷ்பா, ஹரிணி, ஷிவானி ஆகிய மூன்று பேரின் உடல்களையும் மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தங்கராஜை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கராஜ் தண்ணீர் தொட்டிக்குள் மனைவி மற்றும் மகள்களை தள்ளிவிட்டு கொலை செய்தாரா அல்லது மூவரும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் விசாரணைக்கு பின்னரே, 3 பேர் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். தண்ணீர் தொட்டிக்குள் இருந்து தாய் மற்றும் மகள்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.