இந்தியாவில் மிக முக்கிய விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்கள், உலக அரங்கில் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் கூடுதலான கிரிக்கெட்டிற்கான உள்கட்டமைப்பு வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, கோவை பகுதியில் பிரம்மாண்டமாக ஸ்டேடியம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவையில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் மற்றும் வர்த்தக வளாகம் அமைப்பதற்கு தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது. பொது மற்றும் தனியார் கூட்டு (PPP) முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
எங்கே இந்த ஸ்டேடியம் அமைகிறது ?
கோயம்புத்தூரில் ஸ்டேடியம் அமைக்க நான்கு இடங்கள் தேர்வு செய்த நிலையில் இறுதியாக, ஒண்டிப்புதூர் பகுதியில் 20.7 ஏக்கர் பரப்பளவில் அமைய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கான தடையிலான சான்று கோரி, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தடையில்லா சான்று பெற்ற பிறகு விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகளில் விளையாட்டு துறை முழுவீச்சில் ஈடுபட்டது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?.
கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு உயர்தர இருக்கை வசதிகள், விஐபி-க்களுக்கான இருக்கை,இரு அணிகளுக்கான சர்வதேச அளவிலான ஓய்வறை, வீரர்களுக்கு பயிற்சி அரங்கம், ஸ்பாக்கள், பொழுதுபோக்கு வசதிகள், பார்க்கிங் வசதிகள் என்று அனைத்தும் இடம் பெற உள்ளது.
டெண்டர் அறிவித்த தமிழக அரசு
கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூரில் உலக தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் அமைக்க அரசு தனியார் கூட்டு முயற்சியில் ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில் விருப்பமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 24- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://tidco.com தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.