Coimbatore Smart city : ஸ்மார்ட் சிட்டி......முதல் பரிசு பெற்ற கோவை மாநகராட்சி ; எதற்காக தெரியுமா?

மத்திய அரசின் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் சார்பில் ISAC (India Smart city Award Contest) விருதுகள் 2022, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஸ்மார்ட் சிட்டி மிஷன், இயக்குநரால் அறிவிக்கப்பட்டது.

Continues below advertisement

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு உடன், கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் ஆகிய 9 குளங்களை புனரமைத்து, மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குளக்கரைகளில் நடைபாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement


அதேபோல மக்கள் அதிகம் கூடும் பந்தய சாலை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் மாதிரி சாலைகளை அமைப்பதோடு, மக்களை கவரும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உக்கடம் குளக்கரையில் அமைக்கப்பட்ட ‘ஐ லவ் கோவை’ செல்பி பாயிண்ட், பந்தய சாலை பகுதியில்  உள்ள பிரமாண்ட மீடியா டவர், குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டு வரும் தமிழ் எழுத்தளால் 20 அடி உயரத்தில் செய்யப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கிளாக் டவர், தேவதை செல்பி ஸ்பாட் உள்ளிட்டவை கோவையின் புதிய அடையாளங்களாக மாறி வருகின்றன.


இந்நிலையில் மத்திய அரசின் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் சார்பில் ISAC (India Smart city Award Contest) விருதுகள் 2022, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஸ்மார்ட் சிட்டி மிஷன், இயக்குநரால்  அறிவிக்கப்பட்டது. அதில், கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல் மற்றும் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பில்ட் எண்விரான்மென்ட் பிரிவில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி முதல் பரிசு பெற்றுள்ளது. இந்திய அளவில் 52 நகரங்களிலிருந்து 88 முன்மொழிவுகள் இந்த விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், திட்ட செயல்பாட்டில் சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதில் கோயம்புத்தூர், இந்தியாவின் தெற்கு மண்டலத்தில் முதல் பரிசு பெற்றுள்ளது.


இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஏபிபி நாடுவிடம் கூறுகையில், “ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக கோவை மாநகராட்சி 2 பிரிவுகளில் பரிசு பெற்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை சூழலுக்கு உகந்த வகையில் செயல்படுத்தியதற்காக பில்ட் எண்விரான்மென்ட் பிரிவில் முதல் பரிசையும், தென்னிந்தியாவில் சீர்மிகு நகரங்களுக்கான விருதில் முதல் பரிசையும் வென்றுள்ளது. ஆர்.எஸ்.புரம், பந்தைய சாலை போன்ற பகுதிகளில் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தல், வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல், பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவு நீர் குளங்களில் கலப்பதை ஜீரோ சதவீதமாக மாற்றுவதை இலக்காக கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.


நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப் பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. வருகின்ற செப்டம்பர் 27 அன்று இந்திய குடியரசுத்தலைவரால் மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola