தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2021 டிசம்பர் மாதம் “நமக்கு நாமே” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அதில் சில திட்டங்கள் பொதுமக்கள் பங்களிப்புடன் மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டாடாபாத், அழகப்பா செட்டியார் சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.




இந்த அறிவியல் பூங்காவில் பெரிஸ்கோப் மாதிரி, பி.எஸ்.எல்.வி.ராக்கெட் மாதிரி, சந்திராயன் 3 மாதிரி, ஈர்ப்பு கருவிகள், டாக்டர் அப்துல்கலாம் சிலை, மழை வில் வளைவு, சுழலும் பெரிஸ்கோப், ஒலியின் வேகம், தனிம அட்டவணை, அலை இயக்கம், ஈர்ப்புபந்து, நியூட்டன் 3வது விதி, பாஸ்கல் சட்டம், மைய விலக்கு விசை, கியர்பெல் மற்றும் செயின் டிரைவ், ஆற்றல் நிறை மற்றும் மந்த நிலையில் பாதுகாப்பு, மோபியஸ் இசைக்குழு, உணர்வுச்சுவர், உலக நேர குளோப் வகை, ஈரப்பதம் அளவிடும் மீட்டர், மணிக்கூண்டு, எதிரொலிகுழாய், சூரிய குடும்பம், மழை அளவி உள்ளிட்ட அறிவியல் சிறப்பு அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.




அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள், செயல் முறை விளக்கம், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல பாடப் புத்தகங்களில் படிக்கும் ஒலி மாற்றம், ஈர்ப்பு விசை செயல் முறை, கோல்கள், ராக்கெட், மின் கடத்திகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் நேரடியாக ஆசிரியர்களால் விளக்கப்பட்டு அவைகளை மாணவர்களே செய்து பார்க்கின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்படும் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பூங்காவை கண்டுகளித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் அறிவியல் பூங்காவை கண்டுகளித்துள்ளனர். மேலும் இந்த அறிவியல் பூங்காவில் விஞ்ஞானிகளில் ஓவியங்கள் அவர்களது கண்டுபிடிப்புகளுடன் வரையப்பட்டுள்ளது. அதே போல விளையாட்டுடன் அறிவியலை விளக்குவதால் இவை பள்ளி குழந்தைகள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.




இந்த அறிவியல் பூங்காவில் பார்வையாளர் நேரம் காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது எனவும், நுழைவுக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ள கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், இதனை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும் படிக்க : 'யானைகளின் சூப்பர் ஸ்டார் செங்களூர் ரங்கநாதன்’ ; ஆசியாவின் மிக உயரமான யானையின் உருக்கமான கதை!