கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான ஜெ.ஆர்.டி. என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டி வரும் கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் ஜெ.ஆர்.டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது சகோதாரர் அன்பரசன் ஆகியோருக்கு நெருக்கமானவர். முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய போது, ஜெ.ஆர்.டி. ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை நடத்தி இருந்தனர். இந்நிலையில் ஜெ.ஆர்.டி ரியல் எஸ்டேட் நிறுவனம் கோவைப்புதூர் பகுதியில் புதியதாக 50க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்பை கட்டி வருகின்றது. இந்நிலையில் அந்த குடியிருப்பு கட்டிடங்களை இன்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.




ஜெ.ஆர்.டி. ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டி வரும் வீடுகள் முறையாக  மாநகராட்சியில் அனுமதி பெறப்பட்டு இருக்கின்றதா, வரைபடத்தில் இருக்கும் வீடுகள் இருக்கின்றதா என அதிகாரிகள்  சோதனை செய்தனர். கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தலைமையில் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஜெ.ஆர்.டி நிறுவனம் அபரிவிதமான வளர்ச்சி அடைந்த நிலையில், முறையாக அந்நிறுவனம் விதிகளை பின்பற்றவில்லை எனப் புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் சோதனை மேற்கொண்டனர்.





முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய போது, ஜெ.ஆர்.டி. ரியல் எஸ்டேட்  நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது. அண்மையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திர சேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டி வரும் வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண