சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவாகவும், அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி வகித்து வருகிறார். கோவை மாநகராட்சி 92 வது வார்டுக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு அமைந்துள்ளது. இப்பகுதிக்கு எஸ்.பி.வேலுமணியை சந்திக்க அதிமுகவினரும், பொது மக்களும் தினமும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு செல்லும் வழியிலும், வீட்டை சுற்றியும் பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர். அப்போது தோண்டப்பட்ட குழிகளை சரி வர மூடாமலும், பணிகளை முழுமையாக முடிக்காமலும் மாநகராட்சி பணியாளர்கள் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது.




இதன் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். குண்டும், குழியுமாக சாலை இருந்ததால் இரு சக்கர வாகனங்களிலும் சிரமத்திற்கு உள்ளாகினர். பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதனிடையே பாதாள சாக்கடை என்ற பெயரில் மாநகராட்சி நிர்வாகம் அத்துமீறி செயல்பட்டு எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குழிகளை தோண்டிப் போட்டும், குடிநீர் குழாய்களை உடைத்தும் , சாலைகளை அலங்கோலப்படுத்தி உள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். மேலும் பழிவாங்கும் நடவடிக்கையாக இதனை செய்துள்ளதாகவும், எதிர்கட்சி கொறடாவான எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பே இந்த நிலை என்றால், கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் என்ன பாடுபடுவார்கள்? இது தான் திமுகவின் ஒராண்டு சாதனை என அதிமுகவினர் தெரிவித்தனர். உடனடியாக சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.




முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு உள்ள சாலைகள் சேதமடைந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து நேற்று கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். சேதமடைந்து இருந்த சாலைகளில் மண்ணைக் கொட்டி குழிகளை சரி செய்து சீரமைத்தனர். கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே சுகுணாபுரம் பகுதியிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றதாக கூறிய மாநகராட்சி அதிகாரிகள், அப்பணிகள் முடிவடைந்ததும் உடனடியாக சாலைகள் சீரமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண