கனமழை காரணமாக வால்பாறை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்றும் பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு தினங்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி, பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை மாநகர பகுதிகளில் பரவலாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே வெள்ளப் பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் மற்றும் கவியருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சின்னக்கல்லார், சோலையார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிக் கூடங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.. இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நாளையும் வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மண் சரிவினால் வீடுகளும் இடிந்து சேதமடைந்துள்ளன. கனமழை நீடித்து வருவதால் வால்பாறை பகுதியில் ஆற்றங்கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்