கோயம்புத்தூர் நகரத்தின் மையப்பகுதியில், உருவாகி வரும் செம்மொழி பூங்கா பாரம்பரியமும் பசுமையும் கலந்த நவீனத்துவத்துடன் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழின் செம்மொழிப் பெருமையை பிரதிபலிக்கும் விதமாகவும், இயற்கையோடு மனிதன் மீண்டும் இணைவதற்கான ஒரு தளமாகவும் இப்பூங்கா உருவாகி வருவதால், கோவையின் புது அடையாளமாக மாறும் என்று கூறப்படுகிறது.

Continues below advertisement

கோவையில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை வரும் 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும், டிசம்பர் 1-ம் தேதி முதல் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Continues below advertisement

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கரில் செம்மொழிப்பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப்பூங்காவை வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட பின், டிசம்பர் 1-ம் தேதி முதல் செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம். பள்ளிக் குழந்தைகளுடன் முதல்வர் கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளை முதல்வர் பார்வையிட உள்ளார். கோவை நகரின் முக்கியப் பிரமுகர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

செம்மொழிப் பூங்காவில் மொத்தமுள்ள 45 ஏக்கர் பரப்பளவில் 7 ஏக்கர் மாநாட்டு மையம் போக, மீதமுள்ள பகுதியில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும். செம்மொழிப்பூங்காவை பராமரிக்கும் பணியை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் பார்த்துக் கொள்ளும். மாநகராட்சி நிர்வாகம் அதனை மேற்பார்வையிடும்.கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட பின், டிசம்பர் 1-ம் தேதி முதல் செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம். செம்மொழிப்பூங்கா பணிகள் தாமதமானால், தாமதம் என்று சொன்னவர்கள், வேகமாய் நடந்தால் அவசரமாய் நடப்பதாக சொல்கின்றனர். தற்போது அவசியம் வந்துவிட்டதால், செம்மொழிப் பூங்காவை திறக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், அரசு முதன்மைச் செயலர் (நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை) த.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதனிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை செம்மொழிப்பூங்கா தொடக்க விழாவைத் தொடர்ந்து நடைபெற உள்ள ‘டிஎன்ரைஸ்’ நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்கா, வெறும் ஓய்வுக்காக மட்டுமல்லாமல், கற்றலும் அனுபவமும் கலந்து மக்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 16 வகையான தோட்டங்கள் மற்றும் 3 வகையான வனங்கள் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதுதவிர இயற்கை அருங்காட்சியகம்,  1000 பேர் அமரும்வகையில் மாநாட்டு மையம், சிறுவர் விளையாடும் பொழுது போக்கு மையம், திறந்த வெளிஅரங்கு, இயற்கை உணவகம், நர்சரி தோட்டம்,  வாகனநிறுத்தம் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான பூங்காவுக்குள் நடைபாதைகள், உடற்பயிற்சி கூடங்கள், விழா மண்டபங்கள், வெளிநாடுகளின் தோட்ட மாதிரிகள், சிறுவர் விளையாட்டு பகுதி, விசிட்டர்கள் சென்டர், குளிரூட்டிய அரங்குகள், உணவகம், மற்றும் வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும்.