சேரன் விரைவு ரயிலில் துணை ராணுவத்தினருக்கும் பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை ராணுவத்தினர் - பயணிகள் தகராறு:
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் சேரன் விரைவு ரயில் நேற்று இரவு 9:30 மணி அளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியில் இருந்த துணை ராணுவத்தினர் 10 பேர் கொண்ட குழு பயணித்தனர்.
அப்போது ரயிலில் பயணிகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மேலும் வாக்குவாதம் அதிகரித்து துணை ராணுவத்தினர் பயணிகளை துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது.
ரயில் நிறுத்தம்:
இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி ரயில் முன் நின்று, ரயிலில் பயணித்து வரும் துணை ராணுவத்தினரை கீழே இறக்கினால் மட்டுமே ரயிலை எடுக்க விடுவோம் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் துணை ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி துணை ராணுவத்தினரை அனைவரையும் கீழே இறக்கி சபரி விரைவு ரயிலில் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறை தரப்பில் கூறியதாவது சென்னையில் இருந்து வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த துணை ராணுவத்தினருக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றன தகராறு காரணமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் கீழே இறங்கி துணை ராணுவத்தினரை கீழே இறக்கினால் மட்டுமே ரயிலை இயக்க விடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டதால் துணை ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கியதாக தெரிவித்தனர்.
மேலும் பின்னே வந்த சபரி விரைவு ரயிலில் துணை ராணுவத்தினரை ஏற்றி அனுப்பியதாக தெரிவித்தனர் இது குறித்து யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.