கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நடந்த கார் விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெற வேண்டும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை மாநில அரசை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
”தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை பா.ஜ.க. வரவேற்கிறது.
தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கார் விபத்து:
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியதில், காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இதனையடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. சம்பவ இடத்தில் காவல் துறை உயரதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கார் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையிலிருந்து தடைய அறிவியல் குழுவினர் கோவைக்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழந்த நபர் ஜமோசா முபின் என்பது விசாரணை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.