கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினர் பேரூர் பெரியகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம் தூர்வாருதல் உட்பட 12 குட்டைகளை தூர்வாரி நீர் கொண்டு வந்து சேர்க்கும் பணிகளை செய்துள்ளனர். மேலும் குளக்கரை, நகரின் ரிசர்வ் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்குதல், நீர் நிலைகளில் பனை விதைகளை ஊன்றுதல், வாய்க்காலை தூர்வாரி கண்காணித்தல், குளக்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கும் பணிகளை அந்த அமைப்பு செய்துள்ளது.




வெள்ளலூர் பட்டாம்பூச்சி பூங்கா


கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வெள்ளலூர் குளத்தின் நீர்வழிப் பாதையை தூர்வாரி, குளத்திற்கு நீர் கொண்டு வந்த பின் வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியில் பல்வேறு பணிகள் துவங்கப்பட்டன. முதற்கட்டமாக குளத்தின் கரையில் மியாவாக்கி அடர்வன முறையில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட 275 வகையான நாட்டு மரங்களை நட்டு அடர்வனம் உருவாக்கப்பட்டது. அதனை ஒட்டி மூங்கில் வனம், மருத்துவ குணங்களைக் கொண்ட செடி கொடிகள், பூ வகை மரங்கள் என 200 க்கும் மேற்பட்ட தாவரங்கள நடப்பட்டு பல்லுயிர் சூழல் பெருகுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக குளத்தின் கரைகளில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது.




இதையடுத்து The Nature and Butterfly Society குழுவினரின் உதவியுடன் தொடர்ந்து ஒரு வருடம் குளக்கரையில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் 103 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வெள்ளலூர் குளக்கரையில் இருப்பது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் சூழலை மேம்படுத்தவும், பட்டாம்பூச்சி இனங்களை பாதுகாக்கவும், மாணவர்கள் பொது மக்களுக்கு பல்லுயிர் சூழல் பற்றிய விழிப்புணர்வை கொண்டு செல்லவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்தது. நீர்வளத்துறை அனுமதியோடும், தனியார் நிறுவனங்களின் நிதியுதவியோடும் 66 இலட்ச ரூபாய் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்கா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.


பட்டாம்பூச்சி பூங்கா சிறப்பம்சங்கள்


18 அடி தமிழ்நாடு பட்டாம்பூச்சி நுழைவாயில், நீர்மேலாண்மை, சுற்றுச்சூழல், பல்லுயிர்கள் பாதுகாக்க முன்னோர்களின் நடவடிக்கை குறித்த புடைப்பு ஓவியங்கள், மூங்கில் பாலம், பட்டாம்பூச்சி வாழ்க்கை சுழற்சி, கோவை, மேற்குத்தொடர்ச்சி மலை, நொய்யல் ஆறு, குளங்கள்,   பட்டாம்பூச்சிகள் உள்ளடக்கிய தகவல் மையம், பட்டாம்பூச்சி செல்பி முனை, பறவைகள், விலங்குகள், ஊர்வன கல் சிற்பங்கள், பட்டாம்பூச்சி குடும்பங்கள் தகவல் பலகை உள்ளிட்டவை பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் குள பட்டாம்பூச்சி பூங்காவை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம் எனவும், பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முன்பதிவு செய்து கண்டு களிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளலூர் பட்டாம்பூச்சி பூங்கா பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மட்டுமின்றி, பட்டாம்பூச்சிகள் பற்றி பலவகையான தகவல்களை அறிந்து கொள்ளும் இடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.