கோவையில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, காஷ்மீருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் துணிக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 13 ஆம் தேதியன்று வழக்கம் போல வேலைக்குச் சென்று திரும்பி வீடு திரும்பவில்லை. சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அச்சிறுமியின் பெற்றோர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பேரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சிறுமி இதற்கு முன்னர் வேலை செய்த துணிக் கடையின் உரிமையாளரின் மகனான முகமது அயாஸ் என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்ததும், சிறுமி காணாமல் போனதில் இருந்து முகமது அயாசும் காணாமல் போய் இருந்ததும் தெரியவந்தது.
சிக்கியது எப்படி?
முகமது அயாஸை காணவில்லை என அவரின் பெற்றோர் கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த வாலிபரும், சிறுமியும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காஷ்மீர் காவல் துறையினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் தகவல் அளித்தனர். இதன் பேரில் காஷ்மீர் காவல் துறையினர் இருவரையும் பிடித்தனர். பின்னர் இது குறித்து காஷ்மீர் காவல் துறையினர் கோவை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் காஷ்மீர் சென்று வாலிபரையும், சிறுமியையும் மீட்டு விமானம் வாயிலாக கோவைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் முகமது அயாஸ் சிறுமியை காதலிப்பதாக கூறி ஓராண்டாக பழகி வந்ததும், தனக்கு தன் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியதும் தெரியவந்தது. மேலும் முகமது அயாஸ் கடந்த 13 ஆம் தேதி சிறுமியை அழைத்துக் கொண்டு காஷ்மீர் சென்று, அங்கு அறை எடுத்து தங்கி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கடத்தல், போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, முகமது அயாஸ்சை கைது செய்தனர்.