கோவையின் பெருமைகளை பறை சாற்றும் வகையிலும், கோவை மக்களிடையே கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இந்த விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவை விழா நடைபெறவில்லை.



தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இவ்வாண்டிற்கான கோவை விழா நிகழ்ச்சி கடந்த 9 ம் தேதியன்று துவங்கியது. இதையொட்டி ஏப்ரல் 9 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 17 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆர்ட் ஸ்ட்ரீட், வாலாங்குளம் குளக்கரையில் லேசர் ஷோ ஒளிக் கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.




கோவை விழாவை முன்னிட்டு கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில், பழங்கால கார் கண்காட்சி இன்று துவங்கியது. இந்த கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார். பின்னர் பழங்கால கார்களை ஆர்வத்துடன் கண்டு இரசித்தார். இக்கண்காட்சியில் கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களை காட்சிப்படுத்தினர். கண்காட்சியில் சுமார் 30 பழைய மாடல் கார்கள் இடம் பெற்றுள்ளன.




சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1980 ஆம் ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பழைய மாடல் பென்ஸ் , செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர், வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. முன்னதாக கார்கள் அனைத்தும் பந்தய சாலை பகுதியில் வலம் வந்தன. திடீரென பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். தொடர்ந்து பழங்கால கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் வைக்கப்படும் என கோவை விழா ஒழிங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். பழங்கால கார் கண்காட்சியில் பொது மக்கள் ஆர்வத்துடன் கார்களை கண்டு இரசித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண