கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை வரவேற்றார்.
பின்னர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடந்தது. விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தியது, ஆயிரம் யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்தும் கூடுதல் யூனிட்க்கு உயர்த்தப்பட்ட கட்டணத்ததில் 70 பைசா குறைப்பு, கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்று பீளமேடு பகுதியில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வரும், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் தயாநிதி மாறன் உறவினரும், மல்லிகை இராம்குமார் என்பவரின் தயாருமான மகாலட்சுமி (85) வயது கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் மகாலட்சுமியின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 52 க்கு உட்பட்ட பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் ரூ. 1.28 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது போடப்பட்ட சாலையின் தரத்தையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சிகளின் போது அமைச்சர்கள் முத்துச்சாமி, காந்தி, செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பின்னர் கோவை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்