தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் இரண்டு நாட்கள் பயணமாக இன்று கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையம் மற்றும் அவிநாசி சாலையில் திரண்டு இருந்த திமுக தொண்டர்கள் மு..ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு..ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, கட் அவுட், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. முதலமைச்சரை வரவேற்று ஆங்காங்கே போஸ்டர்கள் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளன.




..சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி மேடையில் உள்ள பேனரில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் படம் இடம் பெறவில்லை. தமிழ்நாடு அரசின் சின்னமும், முதலமைச்சர் பெயர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றும் பாஜக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் முதலமைச்சர் நிகழ்ச்சியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர். அதேசமயம் இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். முன் வரிசையில் அமர்ந்த வானதி சீனிவாசனை முதலமைச்சர் உள்ளிட்டோர் அழைத்து மேடையில் இடம் அளித்தனர்.




..சி. மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 441.76 கோடி ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை 23 ஆயிரத்து 534 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார். 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 128 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பல்வேறு அரசு துறைகள் சார்பில் 596.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 67 திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இன்று மாலை திருப்பூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.




நிகழ்ச்சியில் பேசிய மு..ஸ்டாலின், “கோவை விமான நிலையத்தில் இருந்து இங்கு வர இரண்டரை மணி நேரமாகி விட்டது. மிகுந்த ஆர்வத்துடன் ஏராளமானோர் வரவேற்றதால் குறித்த நேரத்திற்கு மேடைக்கு வர தாமதம் ஏற்பட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து புதிய திட்டங்களை துவக்கி வைக்க வந்திருக்கிறேன். 22 ம் தேதி இந்த நிகழ்விற்கு வர வேண்டும் என செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார்.இது நிகழ்சியாக இல்லாமல் மாநாடாக செந்தில் பாலாஜி நடத்தி இருக்கிறார். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மதிப்பீட்டில் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது.



அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான வெற்றி நிலையில், கோவையில் வெற்றி வாய்ப்பை பெற வில்லை. வெற்றி வாய்ப்பை தவற விட்ட மாவட்டமாக இருந்தாலும், மாபெரும் மக்கள் சபை இங்கு தான் நடத்தப்படுகின்றது. செந்தில்பாலாஜியை பொறுப்பாக நியமித்து இருக்கின்றேன். அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள் தான் என இந்த அரசு செயல்படுகிறது. திமுக அரசை பொறுத்த வரை மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டது. ஆட்சி அமைந்த அன்றே இதற்கு தனித்துறை அமைக்கப்பட்டது. இப்போதும் பலர் மனுக்களை கொடுத்து வருகின்றனர். பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும். புதிய திட்டங்களை விட, தனி மனிதனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது தான் முக்கியம்.




ஏராளமான திட்டங்களை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கும். மாநகராட்சி பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் வழங்கப்படும். கடந்த ஆட்சியில் திட்டசாலைகள் போடப்பட வில்லை. 5 திட்டசாலைகளை அமைக்க 200 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் இருக்கும் சிறைச்சாலை நகரின் வெளிப்பகுதிக்கு கொண்டு செல்லப்படும். சிறைச்சாலை உள்ள பகுதியில் இரண்டு கட்டமாக செம்மொழி பூங்கா 200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தபடும். இந்த பணிகளுக்கு அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும்.





கோவை நகர்புற வளர்ச்சி குழுமம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வெடுக்காமல் உழைக்க கூடியவர் செந்தில்பாலாஜி. தொழில்களுக்கு அடித்தளமாக இருக்கும் மாவட்டம் கோவை. இது போன்ற தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் முதல் தொழில் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். நாளை தொழில் முதலீடு மாநாட்டில் புதிய ஓப்பந்தங்கள் ஏற்படுத்தபடுகின்றது. இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். அதில் முதலிடம் கோவையாக இருக்கும்

நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன்
. செயலில் எனது பணி இருக்கும். அனைத்திலும் தலை சிறந்த மாவட்டமாக கோவை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.