கோவை கொடிசியா அரங்கில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற பெயரில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முன்னதாக தொழில் துறை கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.




இந்த மாநாட்டில் ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 74835 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் போடப்பட்டது. 485 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும் நிறுவனம் மூலம்1960 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. இது தவிர 13 ஆயிரத்து 413 கோடி ரூபாய் மதிப்பில் 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 11681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. மேலும் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3944 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு ஒற்றைச் சாளர கைபேசி செயலி, தமிழ்நாடு நிதி நுட்பகொள்கை 2021 ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.




முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு..ஸ்டாலின், ”5 வருடத்தில் சாதிக்க வேண்டியதை 6 மாதத்தில் சாதித்து இருப்பதாக தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர். அனைத்து முன்கள பணியாளர்களும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மக்களை காப்பதுதான் அரசின் பணி. இதில் இந்த அரசு மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றது. 5 மாதங்களில் இது 3 வது முதலீட்டாளர் மாநாடு . அரசின் மீது நம்பிக்கை வைத்து தொழில் நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றனர். ஜூலை, செப்டம்பர், நவம்பர் என இரண்டு மாதங்களுக்கு ஒரு மாநாடு. இதே வேகத்தில் போனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக விரைவில் உருவாகும். பல மாநில முதல்வர்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக என் பெயரை சொல்கின்றனர். இது அரசுக்கு கிடைத்த பெருமையல்ல. மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. நம்பர் ஒன் தமிழ்நாடு என்று சொல்லும் வகையில் செயல்பட வேண்டும்.




இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 22 மாவட்டங்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் ஊர்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்பு ஏற்படுத்தபட்டுள்ளது. தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை வெளியிடப்பட்டு இருக்கின்றது. நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும். 2000 ல் கலைஞர் ஆட்சியில் டைடல் பார்க் துவங்கப்பட்டது. தகவல் தொழில் நுட்ப துறையில் அதன் தொடர்ச்சியாக தொழில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக டைடல் பார்க் ஏற்படுத்தப்படும்.


பொள்ளாச்சி பகுதியில் 21 கோடியில் தென்னை நார் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக ஒரு தொழிலுக்கு என இல்லாமல் பல்வேறு தொழில்களுக்கு கோவை மையமாக இருக்கின்றது. கோவையில் தொடாத தொழில்கள் இல்லை. பாராட்டத்தக்க நகரமாக கோவை உருவாகி வருகின்றது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக கோவை இருக்கின்றது. தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது வெகு தொலைவில் இல்லை. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வருமென்ற நம்பிக்கை உள்ளது.


வான்வெளி, பாதுகாப்பு துறையில் கோவை தொழில் துறையினர் கவனம் செலுத்த வேண்டும். சூலூரில் தொழில்பேட்டை அமைக்கப்படும். போட்டியை வெல்லும் அளவில் நமது தயாரிப்புகள் இருக்க வேண்டும். காஞ்சிபுரம , கிருஷ்ணகிரி மாவட்டங்களை போல மின்னணு பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.. கோவை என்றாலே இங்குள்ள மக்களின் விருந்தோம்பலும், கண்டுபிடிப்புகளும் தான் நினைவுக்கு வரும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கண்டுபிடிப்புகளை கொண்டு வர வேணடும். அதன்மூலம் தொழில வளர்சிசியை ஏற்படுத்த முடியும். திட்டங்கள் வெற்றி பெற தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்” என அவர் தெரிவித்தார்.