முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தியும், திமுக மாநில இளைஞரணி இணைச் செயலாளருமான பைந்தமிழ்பாரி - கீதா தம்பதியின் மகளுமான ஸ்ரீநிதிக்கும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மதியழகன் - விஜயா தம்பதியின் மகனுமான கெளசிக் தேவ் ஆகியோரது திருமண விழா கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு மாலைகளை எடுத்து கொடுத்து திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து மண மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். 


அப்போது பேசிய அவர், “மணமக்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். 1972 ம் ஆண்டு பொங்கலூர் பழனிச்சாமி திருமணத்தையும், 1999 ல் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ்பாரி திருமணத்தையும் கலைஞர் நடத்தி வைத்தார். கலைஞர் இருந்திருந்தால் இந்த திருமணத்தையும் நடத்தி வைத்திருப்பார். அவருடைய மகனான ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைக்கின்றேன். கலைஞர் வாரிசு வாரிசாக திருமணத்தை நடத்தியதைப் போல நானும் நடத்தி வைப்பேன். பொங்கலூர் பழனிச்சாமி 1972 ம் ஆண்டு சட்டமன்ற  உறுப்பினராக இருந்த போது கலைஞர் திருமணத்தை நடத்தினார். கழகத்திற்கு சோதனை வந்த போது,  மாவட்டத்தில் கட்சியை நிலை நிறுத்திய பெருமை பொங்கலூர் பழனிச்சாமியை சேரும்.


இதேபோல், ரஜினி மன்றத்தில் இருந்து திமுகவிற்கு வந்தவர் மதியழகன். அவருக்கு செல்வாக்கு இருக்கின்றது. அவரை சேர்த்து கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். சிறப்பான செயல் வீரராக செயல்பட்டு வருகின்றார். இது ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு, தமிழ் திருமணமாக நடந்து இருக்கின்றது. இது போன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967 முன்பு சட்ட உரிமையில்லை. அண்ணா தலைமையில் ஆட்சி  அமைந்தவுடன் சீர்திருத்த திருமணத்தை சட்ட அங்கீகாரமாக்கி முறைப்படி செல்லுபடியாகும் என்று கொண்டு வந்தார். 


தமிழகத்தில் திமுக ஆட்சி 6 வது முறையாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றது. தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றியுள்ளோம் என கூறவில்லை, 70 சதவீதம் நிறைவேற்றி இருக்கின்றோம். மீதமுள்ள 30 சதவீதத்தையும் விரைவில்  நிறைவேற்றுவோம். அதை மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். 4 நாட்களுக்கு முன்பு கோவை வந்த போது மக்கள்  பெரும் வரவேற்பு கொடுத்தனர். மனுக்களை கொடுக்கும் போது கூட மகிழ்ச்சியோடு, பூரிப்பொடு, நம்பிக்கையோடு கொடுக்கின்றனர். இது தான் திராவிட மாடல் ஆட்சி.


உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த போது மனுக்களை பெற்றுக்கொண்டோம். ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம். இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அப்படி பெறப்பட்ட மனுக்களில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக தனியாக கன்ட்ரோல் ரூம் வைத்து செயல்படுத்துகின்றோம். 15 நாட்களுக்கு ஒரு முறை அங்கு ஆய்வு செய்து வருகின்றேன். 10 வருடங்களாக நடக்காத  வேலை 10 நாட்களில் முடிந்து விட்டதாக பயன் அடைந்தவர் பூரிப்போடு சொல்கின்றனர்.


எந்த பாகுபாடும் இன்றி 234 தொகுதி எம.எல்.ஏகளும் பிரச்னைகள் குறித்த தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் பிரச்னை தீர்க்கப்படும். ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக ஓ.பி.எஸ் சொன்னார். ஒப்புக்காக ஒரு கமிஷன் அமைத்தார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சி அமைத்தால் முறையாக விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தோம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி  ஆறுமுகசாமி அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அதை இப்போது சொல்ல மாட்டேன். சட்டமன்றத்தில் வைத்து அதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து விவாதித்து அதை நிறைவேற்றுவோம்.


தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கையும் வந்திருக்கின்றது. அதையும் சட்டமன்றத்தில் வைக்க இருக்கின்றோம். சட்டமன்றத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்கின்றார். பெண்களுக்கு இலவச பேருந்து, பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல  வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் டெல்லி முதல்வர் தலைமையில் துவங்கப்பட இருக்கின்றது. குடும்பப் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும். நிதி நிலைமை சரியானவுடன் வழங்கப்படும். கலைஞரின் மகன் சொன்னதை செய்வோம்” என அவர் தெரிவித்தார். 


முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து கொடிசியா அரங்கு வரை வழி நெடுங்கிலும் திமுகவினரும், பொதுமக்களும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.