உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தென் பிராந்திய விமானப்படை தளங்களின் தலைமை ஏர்கமெண்டர் இன்டூரியா, நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”இந்த யோகா தினத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் யோகாவை கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவில் மேல்தட்டு முதல் அடித்தட்டு மக்கள் வரை யோகா தினத்தை இன்று கொண்டாடினார்கள். உலகளவில் யோகா என்பது இந்தியாவால் கொடுக்கப்பட்ட கொடை. ஒன்றுபட்ட இந்தியா கலாச்சாரம் என்ற அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள நீர் ஆதாரங்கள் மூல ஆதாரங்கள் ஆற்றங்கரை நதி ஓரங்களில் பண்பாடு வளர்ந்தது.




வசிஷ்டர், விசுவாமித்ரர் போன்றவர்கள் யோக கலைகளை முறைப்படுத்தி கொடுத்ததால் தான், அக்கலைகள் இன்றும் அழியாமல் இருந்து வருகிறது. குருவைப் மதிக்கும் பழக்கம் யோகாவின் மூலம் கிடைக்கும். மன ஒருமைப்பாடு என்பது யோகக் கலைகள் மூலம் தான் கிடைக்கும் எனவும், யோகக் கலைகள் மூலம் மகாத்மா காந்தி, குருநானக், விவேகானந்தர் போன்றவர்கள் மன வலிமையைக் கொண்டவர்களாக இருந்தார்கள்” என அவர் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுகையில், ”இந்த மண் காப்போம் இயக்கத்தின் பயணத்தில் கிட்டத்தட்ட 28,000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் செய்துள்ளேன். எல்லா இடங்களிலும் மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தார்கள். 74 நாடுகள் மண் காப்போம் இயக்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவோம் என உறுதியளித்துள்ளனர். 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதுவரை 320 கோடிப் பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது போன்ற ஒரு பேராதரவு இதுவரை எங்கும் நடந்ததில்லை.




ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்குத் தேவையான நீண்ட கால பயன் பெறக்கூடிய  திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், அதற்கு அந்நாட்டு குடிமக்களின் ஆதரவு மிக மிக அவசியம். பொதுவாக எல்லா ஜனநாயக நாடுகளிலும் ஐந்தாண்டுகள் மட்டுமே ஒரு ஆட்சி நடைபெறுகிறது. அதனால் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறுகிய கால திட்டங்களை மட்டுமே நிறைவேற்ற நினைக்கின்றனர். மக்களும் அதேபோல் சின்னச்சின்ன விஷயங்களைத் தான் கோரிக்கைகளாக முன் வைக்கின்றனர். ஆனால் இப்போது தான்  முதல் முறையாக மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கையை மக்கள் தெரிவித்துள்ளனர்” என அவர் தெரிவித்தார். இதையடுத்து கோவை - அவிநாசி சாலை வழியாக ஈஷா யோகா மையம் சென்ற ஜக்கி வாசுதேவ்விற்கு கொடிசியா பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.