கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் சார்பில் அமுதம் என்ற திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் ஜி.டி.நாயுடு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியின் போது அமுதம் என்ற இலவச பால் திட்டம் மற்றும் இதம் திட்டத்தின் மூலம் இளம்பெண்கள் எந்த நேரத்திலும் நாப்கின் பெறும் திட்டம் ஆகியவற்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். இதையடுத்து பேசிய வானதி சீனிவாசன், “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து சொல்ல வேண்டியதில்லை. வாட்ஸ் அப் வாயிலாக தெரிவித்தால் போதும். அப்படி தெரியவரும் பிரச்சனைகளை சரி செய்ய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதம் திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் இளம் பெண்கள் எந்த நேரத்திலும் நாப்கின்களை எடுத்துக் கொள்ளலாம்.




இந்தியா வல்லரசாக வேண்டும் என பிரதமர் மோடி கனவு காண்கிறார். பெண்கள் நன்றாக இருந்தால் தான் தலைமுறை நன்றாக இருக்கும். ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரி செய்ய அங்கன்வாடி மையம் மூலம் கண்டறிந்து குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு அமுதம் திட்டம் மூலம் 250 மில்லி லிட்டர் பால் தினமும் இலவசமாக வழங்கப்படும்.  


அரசியல் வாழ்வில் மேடு, பள்ளங்கள் வரும். எங்கள் கட்சியை பொருத்தவரி பதவி என்பது மக்களுக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பாக பார்க்கிறோம். அப்படி இருந்தாலும் நான் துவண்டு விடும் போது, நிர்மலா சீதாராமன் மூலம் தான் உத்வேகம் பெற்றுள்ளேன். அவர் எனக்கு வழிகாட்டி. எனது மெண்டர். அவர் அரவணைக்காமல் இருந்திருந்தால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்” என அவர் தெரிவித்தார்.


பின்னர் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கோவையை பாஜகவின் இரும்புக் கோட்டையாக மாற்றிக் காட்டுவோம். 2026 ம் ஆண்டு பாஜக ஆட்சியமைக்கும். அதற்கான வித்து கோவை தெற்கு தொகுதி. வானதி சீனிவாசனும், நிர்மலா சீதாராமனும் எனக்கு பிடித்த பெண்கள்” என அவர் தெரிவித்தார்.




இதையடுத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ வானதி சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறார்.  சாலை, கழிப்பறை உள்ளிட்டவற்றிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் , பெண்கள் சுகாதாரம், ஆரோக்கியம் குறித்து சேவை செய்ய நினைக்கிறார். பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமாக இருந்தால் தான் அவர்களின் முழுமையான சக்தி வெளிவரும்.


குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பால் கிடைக்காமல் அவஸ்தை படக்கூடாது என தாய் மனதுடன் வானதி மிகவும் அற்புதமான திட்டத்தை துவக்கியுள்ளார். இது நல்ல முயற்சி. வானதி சீனிவாசன் என்னைப் பற்றி சொன்னது ரொம்ப ஜாஸ்தி. பெரியதாக நான் ஒன்றும் செய்யவில்லை. பாஜக ஆட்சியமைக்கும் அளவிற்கு எம்.எல்.ஏ.க்களை மக்கள் தர வேண்டும். பாஜக அரசு அமைய வேண்டும். தேர்தலில் மாறுதல் ஏற்படும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.