தமிழகத்தில் எங்கும் ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது என மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். திருப்பூரில் நடக்கும் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் மத்திய இணையமைச்சர் எல். முருகன் கோவைக்கு வருகை தந்தார். அப்போது பாஜகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் இன்று ஓரே நேரத்தில் அர்ப்பணிக்கப்படுகின்றது. 4080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளால் 1450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
இதே போல செம்மொழி தமிழ் ஆய்வு மையம் இன்று 20 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. திருக்குறளை பிரதமர் முன்னிலைப்படுத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தின் மூலம் 100 க்கும் மேற்பட்ட வெளி நாட்டு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அகில இந்திய வானொலி நிலையம் எங்கும் மூடப்படாது. தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணிகள் மட்டுமே நடக்கின்றது. எதுவும் மூடப்படாது” என அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து குறித்த கேள்விக்கு, ”அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு சித்திரை ஓன்று தான்” என அவர் தெரிவித்தார். எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அவர் பின்னர் மீண்டும் திரும்பி வந்து, “தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி, தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும் வழங்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றது. அதற்கென ஒரு கால வரம்பு இருக்கின்றது. தமிழகத்தற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும். கட்டாயம் தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள்” என அவர் தெரிவித்தார். தமிழ் தெரியாத ஒருவரை சென்னை தொலைக்காட்சி இயக்குனராக நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “டிடி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு குரூப் 1 அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். விஜயன் என்பவரும் இருக்கின்றார்” என அவர் பதிலளித்தார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்