கோவையில் அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாம் என நடத்துநரிடம் மூதாட்டி தகராறு செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பேருந்தில் மகளிர் இலவசப் பயணத் திட்டம் தொடர்பாக, அமைச்சர் பொன்முடி `ஓசி' என்று கூறியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.


இந்த நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற மூதாட்டி பயணம் செய்தபோது இலவச பயணச்சீட்டு வேண்டாம் என கூறி நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டார். மூதாட்டிக்கு நடத்துனர் இலவச பயணச் சீட்டு கொடுத்திருக்கிறார். அதை வாங்க மறுத்த மூதாட்டி, ``நான் ஓசில வர மாட்டேன். காசு வாங்கலைனா எனக்கு டிக்கெட் வேண்டாம். தமிழ்நாடே போனாலும் பரவாயில்லை நான் இப்படித்தான் வருவேன், வேண்டாம்னா வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார்.





நடத்துனர் இலவசப் பயணம்தான் என பலமுறை வலியுறுத்தியும், “எனக்கு ஓசி தேவையில்லை” என்று மூதாட்டி துளசியம்மாள் பணம் கொடுத்து பயணம் செய்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ”அ.தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் மூதாட்டியை அழைத்துச் சென்று நடத்துனரிடம் பிரச்னை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்” என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரித்திவிராஜ் ரங்கசாமி தன் முகநூல் பக்கத்தில், “ஆம் நான்தான் பிரித்திவிராஜ். எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்” என்று பதிவிட்டு இருந்தார்.


இது தொடர்பாக திமுகவினர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் வேண்டுமென்றே அதிமுகவை சேர்ந்த துளசியம்மாள் பாட்டியை பேருந்து பயணம் செய்ய வைத்து நடந்துநரிடம் தகராறு செய்து, அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக தெரிவித்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மூதாட்டி துளசியம்மாள் அதிமுகவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.


இதையடுத்து அதிமுகவை சேர்ந்த பிரத்திவ்ராஜ் (40), மதிவாணன் (33), விஜயானந்த் ஆகிய 3 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் நடந்து கொள்ளுதல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல், அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல், வதந்தி பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண