திருமணம் செய்துகொள்வதாக கூறி 7 கோடி மோசடி புகார் ; முன்னாள் எம்.எல்.ஏ மருமகன் மீது வழக்குப்பதிவு..!

கோவையில் பெண் தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன், அருண் பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்த பெண் தொழிலதிபர் சிந்துஜா (33). இவர் நவ இந்தியா பகுதியில் சாக்லேட் கடை நடத்தி வருகிறார். சிந்துஜாவிற்கு திருமணம் நடந்து விவகாரத்து பெற்ற நிலையில், பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில்  சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று முன் தினம் சிந்துஜா புகார் ஒன்றை அளித்தார். அதில் வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் (41), தொழில் கூட்டாளராக இருந்ததாகவும்,  தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து, கோவை தங்கமும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து இருந்தார். மேலும் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அருண் பிரகாஷ், விக்னேஷ், இக்னேஷ் ஆகியோர் சிந்துஜா வீட்டிற்கு சென்று, அவரையும், அவரது பெற்றோர்களையும் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இது தொடர்பாக ஏற்கனவே கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிந்துஜா புகார் அளித்திருந்த நிலையில் தற்போது அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் மற்றும் விக்னேஷ், இக்னேஷ் ஆகிய மூவர் மீது காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஏமாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் கோவை தங்கம், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். அதில், சிந்துஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர் எனவும், தனது மருமகன் அருண் பிரகாஷுடன் கூட்டாக ஹோட்டல் நடத்திவந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனக்கும் தன் மீது புகார் அளித்துள்ள சிந்துஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், பணம் பறிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிந்துஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தங்கம் அப்புகாரில் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த கோவை தங்கம், வால்பாறை தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். கோவை தங்கம் இரண்டு முறை வால்பாறை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola