நீலகிரி மலை ரயிலில் குன்னூரை சேர்ந்த சிவஜோதி என்ற பெண் முதல் முறையாக ‘பிரேக்ஸ் உமன்’ பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.


தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை ரயில், நீலகிரி மலை ரயில். இந்த ரயில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையிலான மலை ரயில் 122 வயது பழமையானது. கடந்த 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை ரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேகங்கள் தவழும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கை சூழலும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும். மலைகள், அடர்ந்த காடுகள் இடையே ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் என இனிமையான பயணத்தை இந்த ரயில் பயணிகளுக்கு தரும். இதன் காரணமாக இந்த மலை ரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது.




நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே, பல் சக்கரம் உதவியுடன் மலைப் பாதையில் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலின் பெட்டிகள் பாதிப்பு இல்லாமல் இருக்க, ‘பிரேக்’ பிடித்து இயக்கப்படுகிறது. இதற்காக ரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு ‘பிரேக்ஸ் மேன்’ உள்ளனர். இதுவரை ஆண்டுகள் மட்டுமே இப்பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.




நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிவஜோதி. 45 வயதான இவர், நீலகிரி மலை ரயிலில் ‘பிரேக்ஸ் உமன்’ பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் குன்னூர் பணிமணையில், எட்டு ஆண்டுகளாக ‘கேரேஜ்’ பிரிவில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் தென்னக ரயில்வே சிவஜோதியை இப்பணியில் அமர்த்தியுள்ளது. இதற்காக மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இவருக்கு ரயில்வே நிர்வாகம் பயிற்சி அளித்தது.




தற்போது ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில், சிவஜோதி பணியை தொடங்கி செய்து வருகிறார். இதுவரை ஆண்கள் மட்டுமே செய்து வந்த பணியில், முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கு இணையாக அனைத்து பணிகளையும் பெண்களும் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என இப்பணி நியமனத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண