கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். இவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உமா கார்க்கி26 என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும் திமுக தலைவர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்தும் டிவிட்டரில் அவதூறு கருத்துகளை உமா கார்க்கி என்பவர் பரப்பி வருவதாக திமுகவை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
உமா கார்க்கி கைது:
இந்நிலையில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் உமா கார்க்கியை இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை பாஜக சார்பில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் சமூக ஊடக செயல் வீரர்கள் சந்திப்பு கூட்டம் கட்சித் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட உமா கார்க்கிக்கு சிறந்த ஊடக செயல்பாட்டாளர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கி பாராட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கிய சில மணி நேரங்களிலேயே உமா கார்க்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
[திராவிட ஸ்டாக்குகளை கதறவிடும் அக்கா @Umagarghi26 அவர்கள் சிறந்த சமூக ஊடக செயல்பாட்டிற்காக பாராட்டு பெற்ற பொழுது pic.twitter.com/aZXmbRV6wR
[/tw]
சைபர் கிரைம் காவல் துறையினரால் உமா கார்த்திகேயன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள், கோவை சைபர் கிரைம் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பேட்டியளித்த பா.ஜ.க மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, “பாஜக ஆதரவாளரான உமா கார்த்திகேயனை காவல் துறையினர் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நேற்று மாலை நாங்கள் சமூக வலைதளத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு விருது கொடுத்திருக்கிறோம். இதை தாங்க முடியாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து இருக்கிறார்கள். இதுபோல வழக்கு போட்டால் திமுகவினர் மீது ஏராளமான வழக்கு போட வேண்டும். கருணாநிதி பற்றியோ, பெரியாரைப் பற்றியோ பேசியது பொய் என்றால் அதை திமுகவினர் நிரூபிக்க வேண்டும்.
பா.ஜ.க. உறுப்பினர் அல்ல:
திமுகவினரை போல படுத்து உருண்டு கைதாகவில்லை. பெண்ணாக இருந்தாலும் துணிச்சலாக கைதாகி இருக்கிறார். இந்த துணிச்சல் திமுக அமைச்சருக்கு இல்லை. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, கண்டிப்பாக எதிர்வினை ஆற்றுவோம். உமா பாஜக உறுப்பினர் இல்லை. ஆதரவாளர் மட்டுமே. இவ்வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார். உமா கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த திமுகவினரும் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
மோதலை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து:
கோவை வடக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் மற்றும் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது பேசிய அவர், உமா கார்கி சமூக வலைதள பக்கத்தில் இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக உமா தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகவும், இந்துக்களுக்கு மட்டும் ஓட்டு இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு ஓட்டுரிமை ரத்து செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டு இருக்கிறார் எனவும், பாஜக ஆட்களை வைத்து மணிப்பூரை போல கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர்.
அதனால் நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் கொடுத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். பெரியார், மணியம்மை புகைப்படங்களை பதிவிட்டு தவறாக குறிப்பிட்டுள்ளார் எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் அவதூறாக பதிவிட்டுள்ளனர் எனவும் தவறான பதிவுகளை தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதால் புகார் அளித்து இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். இரு தரப்பினரும் சைபர் கிரைம் அலுவலகம் முன்பு இருந்ததால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து உமாவிடம் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல அவதூறாக பேசியதாக சென்னை எழும்பூர் சைபர் க்ரைம் காவல் நிலையத்திலும் உமா மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.