கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் வருகின்ற 17, 18, 19 ஆம் தேதிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்கும் மக்கள் ஆசிர்வாத் யாத்திரை நடைபெறுகிறது. கோவையில் ஆரம்பிக்கும் இந்த யாத்திரையில் மக்கள் ஆசிர்வாதங்களை அவர் வாங்குகிறார். மூன்றாவது நாளில் எல்.முருகன் ஊரில் விவசாயம் செய்து வரும் அவரது தந்தை, தாயினை சந்தித்து ஆசிர்வாதம் பெறுகிறார்.
அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். கட்சியால் கண்டெடுக்கப்பட்டு, பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இதுதான் உண்மையான சமூகநீதி. மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சருக்கும், மக்களுக்கும் இடைவெளி இருக்கக் கூடாது என பாஜக விரும்புகிறது. மக்கள் பிரச்சனைகளை அமைச்சருக்கு போன் செய்து சொல்லும் வகையில் இருக்க வேண்டும். அதற்காக தான் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் உள் அரங்கு நிகழ்ச்சிகள் நடத்தாமல் வெளி அரங்கு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பின்னர் எல்.முருகனின் மக்கள் சந்திப்புகள் இருக்கும்.
திமுக அரசு நூறு நாளை நிறைவடைந்துள்ளது. எந்த ஆட்சிக்கும் 6 மாத கால அவகாசம் தர வேண்டும். இந்த நூறு நாட்களில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கலாம். நல்ல ஆட்சியாளர்களை கொண்டு வந்துள்ளார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி உள்ளார்கள். தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்து இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல் 30 நாளில் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறிய அமைச்சர்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல செல்ல மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும். பாஜக எதிர்க்கட்சி தான், எதிரிகட்சி கிடையாது. இந்த நூறு நாளில் தவறுகள் நடந்த போது தட்டிக் கேட்டுள்ளோம்.
பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்து இருப்பது மக்களுக்கு நல்லது செய்யும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்துழைப்பு தேவை. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், மாநில அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படும். அதற்கு மாநில அரசு, நிதியமைச்சர் தயாரா?. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு பாடுபட்டுக் கொண்டுள்ளது
தமிழக எம்.பி.க்கள் உள்ளூரில் தான் புலி. பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகள் எதுவும் பேசவதில்லை. தமிழகத்திற்கு சம்மந்தம் இல்லாத விவசாயி சட்டங்களுக்கு எதிராக பேசுகிறார்கள். பிரச்சனை இல்லாமல் குரல் கொடுப்பது அரசியல். திட்டமிட்டு பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் நடத்த விடவில்லை. மேகதாது அணை என்பது இரு மாநில பிரச்சனை. தமிழக உணர்வை பிரதிபலித்துள்ளோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை வரவேற்கிறோம். அது அகம சாஸ்திரி விதிகளுக்குவேண்டும் உட்பட்டு இருக்க வேண்டும். அனைவரும் வர வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை. அவர் மக்களுக்காக வேலை செய்துள்ளார். கோவைக்கு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் மீதான குற்றப்பத்திரிகை வந்த பின்பு பதிலளிக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் எங்களது கட்சியை வளர்க்க வேண்டும். பல தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். எஸ்.பி.வேலுமணி மீதான சோதனையால் உள்ளாட்சி தேர்தலில் பாதிப்பு இருக்காது. பாஜக எப்போதும் தேர்தலுக்கு தயாராக உள்ளது.
திமுகவை எதிர்த்து தினமும் பாஜக தான் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆக்டிவாக உள்ளது. பாஜக கட்சியை வளர்ப்பது எனது வேலை. அதிமுக வேறு, பாஜக வேறு. கருத்து வேறுபாடு இருந்தாலும், கொள்கைகளுக்காக ஒன்றாக இருக்கிறோம். சுதந்திர தினத்தன்று கோவையில் பொது இடங்களில் தேசியக் கொடி ஏற்ற தடை விதித்துள்ளனர். டாஸ்மாக் கடையில் நிற்பதால் வராத கொரோனா, தேசியக் கோடி ஏற்றுவதால் வந்து விடுமா?" என அவர் தெரிவித்தார்.