கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோ இன்று மாலை நடைபெற உள்ளது. சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் பகுதியை வரை சுமார் 2.5 கி.மீ தூரம் பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்க உள்ளார். இதனையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணி நிறைவடையும் ஆர்.எஸ்.புரம் பகுதியில், கடந்த 1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார். எனவே இந்த பகுதி முழுவதும் பேரி கேட்டுகள் அமைக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாகனங்களுக்கு இதற்குள் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளைப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியை பொதுமக்களும், பாஜகவினரும் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கின்றனர். இதனை மக்கள் தரிசன யாத்திரை என நாங்கள் அழைக்கிறோம். இது சரித்திர யாத்திரையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.


ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், ”பத்திரிக்கை செய்திகளில் அது போன்று வந்துள்ளது. அதனை தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சி நாடாளுமன்ற குழு ஏற்க வேண்டும். எனவே அதிகாரப்பூர்வமாக பாஜக கட்சி சார்பில் நான் கருத்தை சொல்ல விரும்பவில்லை” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின்  ரோடு ஷோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு அவர்களுடன் இணக்கமாக இருந்து இந்த பேரணி நடத்தப்பட இருக்கிறது. கோவை வாழ் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி வருவதாக தெரிவித்தார். கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்த இருக்கிறார். இதற்கான முன் அனுமதியும் பெறப்பட்டு உள்ளது. அந்த தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களில் இஸ்லாமியர்களும் அடக்கம். இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்துகிறார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இரண்டு மூன்று நாட்களில் முடிவு தெரிவிக்கப்படும்” என்றார்.