கோவையில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து ஏமாற்றி விட்டதாகக் கூறி, பாஜகவினர் வாழைப்பழத்துடன் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டும் விதமாக, திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வடைகளை இலவசமாக வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் மோடி சுட்ட வடைகள் என்ற துண்டு பிரசுரம் மற்றும் வடைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் மோடி சுட்ட வடைகள் என்ற பேனரில் பிரதமர் மோடியின் கைகளில் வடைகள் இருப்பது போலவும், அவர் அளித்து நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டும் இருந்தனர். கருப்பு பணம் மீட்பு, பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்துதல், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுதல், எல்லோருக்கும் சொந்த வீடு தருதல், 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைதல், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை, மோடி சுட்ட வடைகள் என குறிப்பிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் 10 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் வாயில் வடை சுட்டு வருவதை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் சுவையான வடைகளை சுட்டு வழங்கியதாக திமுகவினர் தெரிவித்தனர். சிலர் மோடி சுட்ட வடைகள் என்ற பேனர் முன்பு செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து சென்றனர். பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டாவது முறையாக தமிழகம் வந்த நிலையில், திமுகவினரின் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நூதன பிரச்சாரம் செய்தனர். இந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில் திமுக பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக சார்பில் வாழைப்பழம் கொடுக்கும் நூதன பிரச்சார இயக்கம் இன்று கோவையில் நடைபெற்றது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு வாழைப்பழம் தந்து ஏமாற்றி விட்டதாக கூறி, கோவை சிவானந்தா காலனியில் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடன் திரண்டனர். ஆனால் காவல் துறையினர் வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுத்தனர். அதையும் மீறி பொதுமக்களுக்கு வாழைப்பழம் வழங்கினால் கைது செய்ய நேரிடும் என காவல் துறையினர் எச்சரித்தனர். இதையடுத்து பா.ஜ.க,வினர் முதல்வர் ஸ்டாலின் முகமூடியையும், கையில் வாழைப்பழத்துடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாகவும், பொதுமக்களுக்கு வாழைப்பழத்தை கொடுத்து விட்டதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். போராட்டத்தின் முடிவில் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு கொடுக்க முடியாமல் போனதால், கொண்டு வந்திருந்த பழங்களை மக்கள் சார்பில் தாங்களே சாப்பிடுவதாக கூறி வாழைப்பழங்களை பாஜகவினர் சாப்பிட்டு விட்டு அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.