நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்தும், அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க கோரியும் பா.ஜ.க., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி தொகுதியில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்றிரவு பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். வீடியோ ஆதாரத்துடன் அந்த புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் கடந்த 18 ம் தேதியன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி முதலமைச்சர், ஆ.ராசா, பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதனிடையே இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசிய காட்சிகள் வெளியாகின. அதில் ஆ.ராசா மற்றும் திமுகவினர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து பேசியிருந்தார். “இந்த தேதியில் வருகிறேன் எனக்கூறி போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கால் எடுத்து வை பார்க்கலாம்.. அத்தனை திமுகவினரும் சேர்ந்து போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வா பார்க்கலாம் கோவை மாவட்டத்திற்குள். நீ எங்கே கால் எடுத்து வைக்கிறேன் என பார்க்கிறேன். இது பகிரங்க சவால். தயாரா திமுகவினர்? ஆ.ராசாவை எங்கே கூப்பிட்டு வருகிறீர்கள் என சொல்லுங்கள் பார்க்கலாம்.
சனதான தர்மத்தை ஒழிப்பதாக எவனாவது வந்தால் செருப்பால் அடிப்பேன். யார் நீங்க எல்லாம்? என்ன தெரியும் இந்து சனதான தர்மத்தை பற்றி? இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்று அதிகாலையில் அவரை வீட்டில் இருந்து பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த பாஜக தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். மேலும் காவல் துறையினரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா முன்னிலையில் பாலாஜி உத்தம ராமசாமியை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். பாலாஜி உத்தம ராமசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார். நீதிபதி இல்லத்திற்கு அருகே குவிந்த பாஜகவினர் காவல் துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, “இது அதிகார துஷ்பிரோயகம். ஒரு மதத்தை பற்றி படுகேவலமாக பேசிய எம்.பி.யை கண்டிக்கவில்லை. நான் என்ன தவறாக பேசினேன் என்பதை மாநில அரசு நிரூபிக்க வேண்டும். நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது. இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். என் கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்” எனத் தெரிவித்தார். பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, பீளமேடு பகுதியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உருவபொம்மையை எரித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்