கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவராக பாலாஜி உத்தம ராமசாமி பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் திடீரென மாவட்ட தலைவர் பதவியில் இருந்து பாலாஜி உத்தம ராமசாமி விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு பாலாஜி உத்தம ராமசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடந்த சில தினங்களாக எனது உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டு வருகிறேன். மேற்கொண்டு என்னால் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துவதில் சிரமமாக உள்ளது. ஆகவே என்னை தலைவர் பதவியில் இருந்து விடுவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் என்னை நம்பி அளித்த பதவிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து என்றும் தங்களுக்கு உறுதுணையாக சாதாரண தொண்டனாக கட்சிப் பணியாற்றுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாலாஜி உத்தம ராமசாமியை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விடுவித்துள்ளார். மேலும் கோயம்புத்தூர் மாநகர மாவட்ட பொது செயலாளராக பணியாற்றி வந்த ரமேஷ்குமாரை புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோயம்புத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி மாவட்டத்தினை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணியாற்றி வந்தார். தற்பொழுது சொந்த காரணங்களுக்காக பாஜகவின் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். அவருடைய கடிதத்தினை ஏற்றுக்கொண்டு இன்று முதல் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். கோயம்புத்தூர் நகர் மாவட்ட பொது செயலாளராக பணியாற்றி வந்த ரமேஷ்குமார் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளும், வழக்குகளும்
ரியல் எஸ்டேட் அதிபரான பாலாஜி உத்தம ராமசாமி, பாஜகவில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார். அதனால் பாஜக கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதன்பின்னர் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர், அண்ணாமலை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அதிக அளவிலான கூட்டங்களை சேர்த்தி காட்டினார். அதேசமயம் உள்கட்சிக்குள் சீனியர்களை ஓரம்காட்டுகிறார், தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்குகிறார் என புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக சிலர் பாஜகவில் இருந்து விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். அப்போது ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் தான் மாவட்ட தலைவராக இருக்கிறார் என கட்சியில் இருந்து விலகிய பாஜக மகளிரணி மாநில மகளிரணிச் செயலாளராக இருந்த மைதிலி வினோ குற்றம்சாட்டியதை பரபரப்பை ஏற்படுத்தியது.
சனாதனம் தொடர்பாக பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி முதலமைச்சர், ஆ.ராசா, பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் பாலாஜி உத்தமராமசாமி மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பீளமேடு காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் கொடிக்கம்பம் அமைத்து பாஜக கொடி ஏற்றச் சென்ற போது, பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம், பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோருக்கு சொந்தமான நிலம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அடுத்தடுத்த வழக்குகளால் பாலாஜி உத்தம ராமசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
பதவி விலகல் காரணம்
பாலாஜி உத்தமராமசாமியின் பதவி விலகலுக்கு உட்கட்சி பிரச்சனைகளே காரணம் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர். மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.நந்தகுமார் உள்ளிட்டோருடன் பாலாஜி உத்தம ராமசாமிக்கு பிரச்சனை இருந்து வந்ததாகவும், கோஷ்டி மோதல்களும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை எனவும், தனக்கு என தனி கோஷ்டியை பாலாஜி உத்தம ராமசாமி உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களாக இவர் கூறிய ஆட்களை கட்சி நியமிக்காததால் அதிருப்தி அடைந்துள்ளார். அதேபோல நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி முறையாக அமைக்காமல் இருந்தது, கட்சி பணிகளில் சுணக்கம் ஆகிய காரணங்களால் கட்சி தலைமை அவர் மீது அதிருப்தியில் இருந்துள்ளது. ஏற்கனவே பாலாஜி உத்தம ராமசாமி இரண்டு முறை அளித்த ராஜினாமா கடிதம் ஏற்கப்படாத நிலையில், அவர் மீதிருந்த அதிருப்தி காரணமாக இந்த முறை ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது.