கோவை தொகுதி பாஜக வேட்பாளர் யார்? - தொண்டர்களிடம் பாஜக கருத்து கேட்பு

பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் நடைபெற்றது.

Continues below advertisement

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கோவை தொகுதியில் யாரை வேட்பாளராக களமிறக்குவது, வெற்றி வாய்ப்பு, அவர்களது உள்ளிட்டவை குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, ”இந்த முறை அதிகமான தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இன்று மதியத்திற்குள் தொண்டர்களிடம் கருத்துக்களை சேகரித்து   தலைமையிடம் ஒப்படைக்க உள்ளோம். பாஜகவில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறமும், கருத்து கேட்பு கூட்டம் ஒருபுறம் நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement

பாஜகவிற்கு செலுத்தும் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக போய்விடும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியது குறித்தான கேள்விக்கு, ”செல்லாத ஓட்டாக இருந்தவர்கள் தான், 2014 ஆம் ஆண்டு மூன்றாவது அணி அமைத்து 20 சதவிகித வாக்குகளை பெற்றோம். எனவே தேர்தல் முடிவுகள் வந்த பிறகு யார் செல்லாத ஓட்டுகள் என்பது தெரியவரும்” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஒன்றரை வருடங்களில் இரண்டு ஆளும் கட்சியினர் அழைத்து தான் பிரதமர் வந்தார். இவர்கள் அழைத்ததற்கு ஜனநாயக முறைப்படி பிரதமர் வருகை தந்தார்.


தற்போது இவர்களே அழைத்து விட்டு இவ்வாறு பேசுவது நகை முரணாக உள்ளது. அரசியல் செய்வதற்கு நமது ஜனநாயகத்தில் அனைத்து உரிமைகளும் உண்டு. யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பரப்புரைகள் மேற்கொள்ளலாம்.  பாஜக வளர்ந்து வரும் கட்சி என்பதால் பல்வேறு மாநிலங்களில் நாங்கள் வளம் பெற வேண்டும் என்பதற்காக நட்சத்திர வேட்பாளர்கள் பிரதமர் என பலரும் அதிகமான சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வது ஒரு இயல்பான விஷயம். வாரிசு அரசியலும் ஊழலும் திமுகவிற்கு எப்பொழுதுமே கலங்கமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம். அதை தான் பிரதமர் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்.

ஆளும் கட்சியை எதிர்த்து தான் அரசியல் என்ற அடிப்படையிலும், சித்தார்ந்த அடிப்படையிலும் தான் திமுகவை விமர்சிக்கிறோம். வரும் காலங்களில் வேறு யாரேனையும் விமர்சிக்க நேர்ந்தால் அவர்களையும் விமர்சிக்க தயாராக இருக்கிறோம்.  கோவை தொகுதி பாஜகவுக்கு மிக முக்கியமான தொகுதி. கமலஹாசனை எதிர்த்து எங்களுடைய வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். கோவையில் 98 காலகட்டங்களில் இங்கு பாஜக எம்பி இருந்துள்ளார். தனிப்பட்ட முறையில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக பாஜக வாக்குகளை பெறக்கூடிய தொகுதி இது.  நட்சத்திர தொகுதி என்றால் நட்சத்திரங்கள் தான் நிற்க வேண்டும் என்பது இல்லை. எங்கள் நிர்வாகிகளின் கருத்துக்கள் என்ன? அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை தலைமையிடம் நாங்கள் கூறுவோம்.  கடந்த முறை எதிர் வேட்பாளரை (கமலஹாசன்) எப்படி தோற்கடித்தோமோ அதே போல் இந்த முறையும் அவர் இங்கு நின்றால், மீண்டும் அவரை தோற்கடிக்க பாஜக தயாராக உள்ளது” என்றார்

Continues below advertisement