கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது.
இதனால் சில நேரங்களில் மனித வனவிலங்குகள் மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமுகை வனப்பகுதியில் யானை கூட்டங்களோடு ஒன்று சேராமல் தனியாக ஒரு ஆண் காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. இந்த யானையின் கம்பீர தோற்றத்தை கண்ட பொதுமக்கள் யானைக்கு பாகுபலி என்று பெயரிட்டு செல்லமாக அழைத்து வருகின்றனர்.
இந்த யானை மேட்டுப்பாளையம் ஓடந்துறை, சமயபுரம், வெல்ஸ்புரம், தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்த பாகுபலி காட்டு யானை இதுநாள் வரை பொதுமக்களை தாக்கி உயிர் சேதம் ஏற்படுத்தி இல்லையென்றாலும், தொடர்ந்து பயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்ற பாகுபலி யானை, காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியது. பின்னர் வனக்கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த பாகுபலி யானை, அங்கு வைக்கப்பட்டு இருந்த பொம்மை யானை உருவத்தை சேதப்படுத்தியது. இதனால் வனக்கல்லூரியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். வனக்கல்லூரியில் பாகுபலி யானை நுழைந்தது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்கவும், மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டவும் பாகுபலி காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்த தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். அப்போது மயக்க மருந்து ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் பாகுபலி காட்டு யானை தப்பி வனப்பகுதியில் வேகமாக சென்று மறைந்தது. மேலும் மழைக்காலம் தொடங்கியதால் பாகுபலி காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.