கோவை மாநகராட்சியில் இதுவரை 5 முறை நடைபெற்ற மேயர் தேர்தலில் அதிமுக 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றன. கடந்த ஆட்சி காலங்களில் கோவை மாநகராட்சி மேயர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய திமுக, இந்த முறை நேரடியாக மேயர் பதவியை கைப்பற்றும் நோக்கில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டது. கோவை மாநகராட்சியில் திமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்ததால் முதல் பெண் மேயர் மற்றும் திமுக மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கோவை மாநகராட்சியில் திமுக 73 வார்டுகளில் வெற்றி பெற்றது. கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் மேயர் பதவிக்கு கல்பனா ஆனந்தகுமாரும், துணை மேயர் பதவிக்கு வெற்றி செல்வனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேயர், துணைமேயர் தேர்வின் பின்னணி
கோவை மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி திமுகவில் நிலவி வந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக கிழக்கு மாநகர மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதால் மேயர் கனவுடன் இருந்து வந்தார். ஆனால் திமுக செயற்குழுவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் தனது மனைவிக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக எனது வாய்ப்பை பறித்தார் என அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக இலக்குமி இளஞ்செல்விக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல திமுக கிழக்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதியின் 22 வயது மகள் நிவேதா சேனாதிபதியும் மேயர் போட்டியில் இருந்து வந்தார். அதேசமயம் இளம் வயதும், அனுபவமின்மையுடன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர் என்பதாலும் நிவேதாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. 5 வது முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மீனா லோகுவின் மீது கட்சி தலைமைக்கும், மாவட்ட பொறுப்பாளர்களிடம் நன்மதிப்பு மற்றும் ஆதரவு இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கல்பனா ஆனந்தகுமார் மேயர் வேட்பாளர் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து திமுகவினரிடம் விசாரித்த போது, ”கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு திமுக பொறுப்பாளர்கள் முக்கிய காரணம். அதேபோல உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போது, உட்கட்சி பூசலால் போராட்டங்கள் நடக்கவும் அவர்களே காரணம். அதுமட்டுமின்றி தங்களது குடும்ப பெண்கள் மூலம் அதிகாரத்தை தன்வசப்படுத்த முயன்றனர். அதனால் மாவட்ட பொறுப்பாளர்களின் குடும்பத்தை சேராதவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்றும், அப்படி செய்தால் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் திமுக தொண்டர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக தலைமைக்கு எடுத்துரைத்தோம். அதன்படி எளிய குடும்பத்தை சேர்ந்த புது முகமான கல்பனா ஆனந்தகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தால் வெற்றி செல்வனுக்கு துணை மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.