கோவை வன சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்ற வனப்பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, மூன்று மாதமான குட்டி யானை உடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வனப்பணியாளர்கள், மருத்துவரின் உதவியுடன் தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் தண்ணீர் மற்றும் பழங்களும் அந்த யானைக்கு வழங்கப்பட்டது. வனத்துறையினர் சிகிச்சை அளித்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு அருகிலேயே குட்டி யானை பரிதவிப்புடன் நின்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது.


குட்டியை சேர்க்க மறுத்த தாய் யானை


தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே மூன்று நாட்களாக அந்த யானையுடன் இருந்த மூன்று மாதமான குட்டி ஆண் யானை, அப்பகுதியில் இருந்த ஒரு யானை கூட்டத்துடன் இணைந்து காட்டிற்குள் சென்றது. இதனை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது.



இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப்பகுதிக்கு குட்டி யானையை கொண்டு வந்தனர். பின்னர் குட்டி யானைக்கு பழங்கள் இளநீர் கொடுக்கப்பட்டு அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சி நடைபெற்றது. பலகட்ட முயற்சிக்கு பின்னரும் தாய் யானையுடன் குட்டி யானை சேராததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த யானை பாகன்களை வரவழைக்கப்பட்டனர். குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட பல கட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து அந்த யானை குட்டி சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானை பாகன்களால் அந்த குட்டி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.