Avinashi flyover: கோவை மாவட்டத்தின் அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள 10.1 கிலோ மீட்டர் நீள மேம்பாலம் ஜுலை மாதத்தில் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Continues below advertisement

கோவை அவினாசி மேம்பாலம்:

கோவை அவினாசிபாளைய போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வாக உயர் அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கோல்ட்வின்ஸ் பகுதியில் தொடங்கி உப்பிலிபாளையம் வரையிலான இந்த மேம்பாலம், ஆயிரத்து 791 கோடியே 22 லட்ச ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தான் நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சரவணன் அவினாசி மேம்பால கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, தரமான முறையில் சரியான வழிகாட்டுதல்களின்படியே, பணிகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார். அதோடு, தற்போது வரை 93 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா எப்போது?

மேம்பால கட்டுமான பணிகள் முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மேம்பாலத்திற்கான திட்டத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கின. இடையில் கொரோனா பரவல் காரணமாக கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டாலும், அதைதொடர்ந்து முழு வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வெறும் 7 சதவிகித பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளதால், அதையும் விரைவில் முடித்து வரும் ஜுலை மாதத்தில் மேம்பாலத்தை திறக்க நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்கிரேட், கட்டுமான விவரங்கள்:

தற்போது கட்டப்பட்டு வரும் மேம்பாலமானது 17.25 மீட்டர் அகலத்தில் 10.1 கிலோ மீட்டர் நீளத்திற்கானதாகும். உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி, கோல்வின்ஸ் KMCH வரை இந்த மேம்பாலம் நீள்கிறது. இந்த மேம்பாலத்திற்காக மொத்தம் 305 பில்லர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப் கல்லூரி மற்றும் சித்ரா ஆகிய பகுதிகளில், உள்ளே வருவதற்கும், வெளியே போவதற்கும் என மொத்தம் 8 ராம்ப்கள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, அவினாசி மேம்பாலத்தை சின்னியம்பாலையத்திலிருந்து நீலாம்பூர் வரையில், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 600 கோடி ரூபாயில் நீட்டிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவினாசி மேம்பாலத்தின் முக்கியத்துவம்:

நான்கு வழிப்பாதையை கொண்டுள்ள இந்த உயரடுக்கு மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, தமிழ்நாட்டின் நீளமான உயரடுக்கு மேம்பாலம் எனும் பெருமையை பெறும். அதோடு, அரூர் - துரவூர் உயரடுக்கு நெடுஞ்சாலை மற்றும் பி.வி. நரசிம்மராவ் விரைவுச்சாலையை தொடர்ந்து நாட்டிலேயே மூன்றாவது நீளமான உயரடுக்கு மேம்பாலம் எனும் பெருமையையும் அவினாசி மேம்பாலம் பெறும். நகரின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, 12 சந்திப்புகளை இணைக்கக் கூடிய அவினாசி சாலையின் வழியே இந்த மேம்பாலம் இணைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் பலன்கள்:

  • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: புதிய பலாத்தின் மூலம் டிராபிக் சிக்னல் பிரச்னை இன்றி உப்பிலிபாளையம் மற்றும் கோல்ட்வின்ஸ் இடையேயான பயண நேரத்தில் சுமார் 15 முதல் 20 நிமிடங்களை சேமிக்கலாம்
  • இணைப்பு மேம்பாடு: அண்ணா சாலை, ஹோப் கல்லூரி, பீளமேடு மற்றும் விமான நிலைய சந்திப்பு போன்ற நகரின் பிற முக்கிய பகுதிகளுக்கான இணைப்பையும் மேம்பாலம் மேம்படுத்துகிறது
  • விமான நிலையம் அணுகல்: சின்னியம்பாளையம் முதல் நீலம்பூர் வரை மேம்பாலத்தை 5 கிமீ நீட்டிக்கும் திட்டமானது திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வரும் மக்கள் விமான நிலையத்தை எளிதில் அணுக உதவும்
  • எதிர்கால திட்டம்: அடுத்த 30 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன்படி, மேம்பாலத்தின் நான்குவழிச்சாலை மற்றும் தரைப்பகுதியில் 6 வழிப்பாதைகள் என மொத்தம் 10 வழிகளில் போக்குவரத்து இயங்க இந்த மேம்பாலம் உதவுகிறது.
  • பொருளாதார வளர்ச்சி: அவினாசி சாலையில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஐடி பார்க்குகள் மற்றும் வணிகள் வளாகங்கள் நிறைந்துள்ளன. அவற்றிற்கான அணுகல் மேம்பாலம் மூலம் எளிதாகும். இதனால் பொருளாதார மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி உறுதி செய்யப்படும். டைடல் பார்க் போன்ற இடங்களுக்கு வேலைக்கு செல்வோருக்கான பயணமும் எளிதாகும்.
  • பொதுப்போக்குவரத்து: போக்குவரத்து சிக்கல் போன்ற பிரசனைகள் இன்றி பேருந்து போன்ற பொதுப்போக்குவரத்தில் பயணிப்பது மேம்பாலத்தால் எளிதாகும்.  இந்த மேம்பாலத்தில் ஐந்து பாதசாரி சுரங்கப்பாதைகள் மற்றும் கிருஷ்ணம்மாள் கல்லூரிக்கு அருகில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட்களுடன் கூடிய முன்மொழியப்பட்ட நடைபாதை பாலம் ஆகியவை உள்ளன. இது பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் அணுகலை மேம்படுத்துகிறது
  • உள்ளூர் இணைப்பு: அவினாசி சாலையானது கோவையை ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 544 ஆகியவற்றை இணைப்பதால் உள்ளூர் இணைப்பில் மேம்பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த மேம்பாலம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.