கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நேற்றிரவு ஒரு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து நின்றுள்ளது. இதற்கிடையில் அங்கு வந்த இரண்டு பேரில் ஒருவர் அம்மையத்திற்கு வெளியே நின்றுள்ளார். மற்றொரு நபர் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென ஏ.டி.எம். இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறக்க முயன்றார். ஏ.டி.எம் இயந்திரத்தை திறக்க முயன்றது குறித்து, மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது. இதையடுத்து அங்கிருந்து கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து செட்டிபாளையம் மற்றும் ரோந்து பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற செட்டிபாளையம் காவல் துறையினர், அங்கிருந்த இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இருவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாகில் (18) மற்றும் காலீத் (28) என்பதும் தெரியவந்தது. கோவையில் உள்ள அமேசான் நிறுவன குடோனுக்கு லாரி மூலம் லோடு இறக்கிவிட்டு, திரும்ப சென்ற போது செட்டிபாளையம் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணம் எடுத்தும், ஷாகில் வெளியே காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, காலீத் ஏற்கனவே போலியாக தயாரித்து வைத்திருந்த கள்ளச் சாவி மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை திறந்து பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து காலித் மற்றும் ஷாகில் ஆகிய இருவரையும் செட்டிபாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், வேறு பகுதியில் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் செல்போனில் பேசியபடி இயந்திரத்தை திறந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஏ.டி.எம். இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்